நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘இந்தியன்’ படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அப்படத்தில் கொலை செய்ததற்காக கமல்ஹாசனை கண்டுபிடிக்க போலீஸ் ஒரு லெட்டர்-ஐ வைத்து ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் “மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு” என்று எழுதப்பட்டிருக்கும். இதில் உள்ள “உனக்கு” என்ற வார்த்தையை வைத்து கொலையாளி ஒரு வயதானவர் என்று ஊர்ஜிதப்படுத்தி அதற்கான விளக்கமும் தருவார் அந்த போலீஸ். அதாவது “க்” ன்னாவையும் “கு” வன்னவையும் சேர்த்து எழுதும் பழக்கம் 1940 களிலேயே வழக்குடைந்து போனதை விவரிப்பார்.

இந்த விஷயம் சற்று யோசிக்க வைத்தது.எத்தனை எழுத்துக்கள் இது போன்று மறைந்திருக்கும் அல்லது புது வடிவம் பெற்றிருக்கும்? ஏன்? இதை அறிய முயன்ற போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அதில் ஒரு சிலவற்றை தெரிந்துகொள்வோம் வாருங்கள்....
இந்த விஷயம் சற்று யோசிக்க வைத்தது.எத்தனை எழுத்துக்கள் இது போன்று மறைந்திருக்கும் அல்லது புது வடிவம் பெற்றிருக்கும்? ஏன்? இதை அறிய முயன்ற போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அதில் ஒரு சிலவற்றை தெரிந்துகொள்வோம் வாருங்கள்....
சற்று பின்னோக்கி போனால், எந்த ஒரு ஓலைச்சுவடியிலோ அல்லது கல்வெட்டிலோ மெய்யெழுத்தின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை. காரணம் எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதும் போது புள்ளி வைத்தால் ஓலையில் ஓட்டை விழுந்து கிழிந்து விட வாய்ப்புள்ளது, அதே போல் உளி கொண்டு கல்வெட்டு பொரிக்கும் பொழுது உளியால் அடிக்கடி புள்ளியிட்டால் அந்த கல் சேதாரமாக அதிக வாய்ப்புண்டு, எனவே தான் கல்வெட்டிலும் ஓலையிலும் பெரும்பாலும் புள்ளி இடுவதில்லை. பின் எப்படி அர்த்தம் புரிந்து படித்திருப்பார்கள்? எல்லாம் ஒரு அடிப்படை அறிவு தான். எடுத்துக்காட்டாக “நன்றி” என்பதை “நனறி” “வணக்கம்” என்பதை “வணககம” என்றுதான் எழுதுவார்கள். படிப்பவர்கள் அதை புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.,
மேலும் ‘ஈ’ என்ற எழுத்தை ‘இ’ க்கு மேல் ஒரு சுழி போட்டும் எழுதியிருக்கிறார்கள். தற்போது நாம் நெடில் எழுத்தை குறிக்க பயன்படுத்தும் ரெட்டை கொம்பு எழுத்துக்களும் அப்போது இல்லை.(எ.டு): ”கே” “மே” “கோ”, “போ”, “லோ”. என்பதையும் “கெ” “மெ” “கொ”,”பொ”,”லொ” என்றே குறிப்பிடுவர்.
தொல்காப்பியர் காலத்திற்கு பிறகு தமிழ் எழுத்துக்களில் பெரிதாக மாற்றமேதும் வந்துவிடவில்லை. இப்போது நாம் பயன்படுத்தும் நவீன எழுத்திற்கான மாற்றத்திற்கு வித்திட்டவர் வீரமாமுனிவர். இதில் என்ன ஆச்சர்யமென்றால் இவர் ஒரு இத்தாலி நாட்டுக்காரர்.தாய் மொழி ஆங்கிலம். இவரின் இயற்பெயர் Constantine Joseph Beschi. இவர் தமிழகத்திற்கு வந்த காரணம் என்னவோ கிறிஸ்தவ மதத்தை பரப்பதான். தமிழைக் கற்றுக்கொண்டால் மக்களுடன் நெருக்கமாக பழகி விரைவாக கிறிஸ்தவத்தை பரப்பலாம் என்று எண்ணியே தமிழைக் கற்று கொண்டார். (பின் தமிழ் மீது கொண்ட காதலினால் இங்கேயே செட்டிலாகி பல தமிழ் நூல்களை எழுதினார்) தமிழில் உள்ள சில எழுத்துக்களை எளிமை படுத்தினார். இவரின் இந்த மாற்றத்தினால் தமிழ் இலக்கண விதிகளில் எந்தவித பிழையும் ஏற்படவில்லை என்பது சிறப்பு. வீரமாமுனிவரால் செய்யப்பட்ட மாற்றங்கள்
:
பின்னாளில் தட்டச்சு இயந்திரம் வந்த பிறகு இது போன்ற சில எழுத்துக்களை அச்சிடும் போது உள்ள சிரமத்தை போக்க நவீன எழுத்துக்கள் தந்தை பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக உருவான எழுத்துக்களே ‘லை’ ‘ளை’ ‘னை’ ‘னண’ போன்ற 13 எழுத்துக்கள். நமக்கு தெரிந்த ஒரு திருக்குறளை பழைய தமிழ் எழுத்துக்களில் எழுதிபார்த்தல் என்ன என்று தோன்றியது. இதோ...
திருக்குறள் என்றதும் திருவள்ளுவரைப் பற்றி ஒரு கொசுறு செய்தி. எந்த புத்தகத்தில் படித்தாலும் வள்ளுவரை பற்றி பின்வருபவை பொதுவாக சொல்லப்படுகிறது.
அவர் மயிலாப்பூர் காரர், நெசவுத்தொழில் செய்தார், மனைவியின் பெயர் வாசுகி, ஆனால் இது உண்மை தான் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரமில்லை. அதாவது திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார் (ஆதாரம்: திருவள்ளுவமாலை என்ற நூல்) என்பதை தவிர வேறு எதற்கும் சரியான ஆதாரமில்லை அல்லது அவரை பற்றி எதுவும் தெரியவில்லை. அப்படியிருக்க இன்றைக்கு சிலையாக, போட்டோவாக இருக்கும் திருவள்ளுவர் உருவம், இவர் இப்படித்தான் இருந்தார் என்பது மட்டும் எப்படி தெரிந்தது. அதுவும் யாருக்கும் தெரியாது என்பதே உண்மை. திருவள்ளுவருக்கு இந்த உருவம் கொடுத்து ஐம்பது ஆண்டுகள் தான் ஆகிறது. இளைய தலைமுறையினர் மனதில் பதியவைக்கவும், பிறநாடுகளில் வள்ளுவரின் புகழை பரப்பவும் ஒரு அடையாளம் தேவைப்பட்டதின் விளைவு தான் இப்போதுள்ள கற்பனை வள்ளுவர். ராமநாதபுரம் ஜமீன் பரம்பரையை சேர்ந்த ஒருவரின் ஓவியத்தை மாடலாக கொண்டு, தாடி, கொண்டை, கையில் ஓலை மற்றும் எழுத்தாணி சேர்த்து வரைந்து வந்தவர் தான் இப்போதுள்ள வள்ளுவர்.
இதன்பிறகு வெகு எளிதாக திருவள்ளுவர் எல்லோரிடத்திலும் சேர்ந்தார் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? துரோகம் தெரியுமா? என்று அப்போது பலர் கூப்பாடு போடாமல் இல்லை. பல எதிர்ப்புகளும் வந்தது. பின் வழக்கம்போல் காலப்போக்கில் மறந்துவிட்டு அடுத்த பிரச்சினைக்கு போய்விட்டனர்.
கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று யாரவது பார்த்தா இத்தனை கடவுளின் வடிவம் வைத்து வணங்குகிறோம், அனைத்து கடவுளின் வடிவமும் மனிதனின் கற்பனை சக்தி தானே! அதிக மொழிகளில் அச்சிடப்பட்ட தமிழ் புத்தகம் என்ற பெருமைக்குரிய தத்துவ நூலை கொடுத்தவருக்கு இதை கூட செய்யவில்லையென்றால் எப்பூடி?
எண்ணமும் எழுத்தும்
-மணி