Saturday, December 8, 2018

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு- Version 1.O

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பது நியூட்டனின் 3ம் விதி மட்டுமல்ல, வாழ்க்கையின் பொதுவான தத்துவமும் கூட.  இதில் நாம் பார்க்க போகும் நிகழ்வு கூட ஒரு தவறான முடிவின் விளைவு எப்படி அமையும் என்பதைத்தான்.

1957. சீனா தன்னை ஒரு கம்யூனிச நாடாக நிறம் மாற்றிக் கொண்டிருந்த காலம். மாவோ அதிபராக இருந்தார். கம்யூனிச தலைவர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.  இவரின் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது. ஆம் 'மாவோயிஸ்ட்' என்ற தீவிரவாத அமைப்பின் பெயர் இவரின் திருநாமத்தில்  இருந்து தோன்றியதுதான்.

1950களில் சீனா பல்வேறு துறைகளில் பின் தங்கியே இருந்தது. அதில் முக்கியமான ஒன்று விவசாயம்,உணவு உற்பத்தி. இவ்வளவு பெரிய நாடு சாப்பாட்டிற்கு அடுத்த நாட்டை எதிர் பார்த்துக்கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும். பலமாக சிந்தித்தார் மாவோ. விவாசாயத்தில் சீனா இன்னும் வளர்ச்சி அடையாத காரணத்தை அறிய அந்த துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்தார். அவர்களும் அதிபர் கேட்கிறாரே என்று ஒரு பட்டியலை தயாரித்து மாவோ விடம் கொடுத்தனர். அதில் பல காரணங்கள் இருந்தாலும் ஒரு நூதனமான காரணம்  அவரின் புருவத்தை உயர செய்தது. அது யாதெனில், ' ஒரு சிட்டுக்குருவி ஒரு நாளைக்கு 12 கிராம் தானியத்தை சாப்பிடுகிறது, இதுவே வருடத்திற்கு ஒரு குருவிக்கு கிட்டத்ட்ட 4.5 கிலோ தானியம் தேவைப்படுகிறது. இதன் படி பார்த்தால் வருடம் முழுதும் 66000 பேருக்கு தேவையான உணவை சீனாவின் மொத்த குருவிகளும் அபேஸ் செய்துவிடுகிறது’.  படித்ததில் பிடித்தது என்று இதை குறித்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார் மாவோ.


Mao Zedong
சில நாட்கள் கழித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டார் மாவோ. " நம் நாட்டில் விவசாயம் செழிப்பாக இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் சிட்டுக்குருவிகள் தான். உற்பத்தி செய்வதில் ஒரு பகுதியை இவைகளே தின்றுவிட்டால் நாம் என்ன செய்வது? நாட்டின் எதிர்காலம் தான் என்னவாகும்? நாம் கஷ்டப்பட்டு விவசாயம் செய்வது நமக்காக தான், இங்குள்ள குருவிகளுக்கு அல்ல. அதனால் நாம் ஒரு புரட்சிக்கு தயார் ஆக வேண்டும். நமது உணவு உற்பத்தியை தடுக்கும் சிட்டுக்குருவிகள் அழித்துவிடுங்கள். என்ன செய்வீர்களோ எப்படி கொல்வீர்களோ எனக்கு தெரியாது. இன்னும் ஒரு சில மாதங்களில் சிட்டுக்குருவி என்றொரு இனமே இங்கு இருக்க கூடாது. முடிந்தால் கண்ணில் பட்ட எலிகளையும் கொல்லுங்கள். இதில் விவசாயிகள் மட்டுமின்றி மாணவர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரின் ஒத்துழைப்பயும் எதிர்பார்க்கிறேன்” மூச்சு விடாமல் பேசி முடித்தார் மாவோ. வரலாற்றில் இதை “The Great Sparrow Campaign ” என்று அழைக்கப்படுகிறது. பின்னாளில் கோடிக்கணக்கான மக்களின் சாவுக்கு முன்னுரையாக இந்த அறிவிப்பு இருக்குமென்று அப்போது யாரும் அறியவில்லை. 


சீனாவில் உள்ள குருவிகளுக்கு ஏழரை ஆரம்பித்தது. மாவோ எதிர்ப்பார்த்ததை விட மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்ணில் பட்ட குருவிகளை எல்லாம் கொல்ல ஆரம்பித்தனர். குருவிக்கூடுகளை பிய்த்து எறிந்தனர். முட்டைகள் அழிக்கப்பட்டது. வலைகளில் கூட்டம் கூட்டமாக பொறி வைத்துபிடித்து கொல்லப்பட்டது. உண்டி வில் கொண்டு அடிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுடப்பட்டது. ஊரில் உள்ள மக்கள் எல்லாம் ஒன்றாக திரண்டு ராட்சச மேளம் அடித்து இரைச்சல் ஒலிகளை எழுப்புவர். சத்தம் தாங்கமுடியாமல் குருவிகள் கூட்டமாக பறக்கும். பயத்தில் கீச்சிட்டு வட்டமடித்து கொண்டே இருக்கும். தரை இறங்க விடாமல் மக்கள் அதனை விரட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் களைப்படைந்து வலுவில்லாமல்  சுருண்டு விழுந்து சாகும். இறந்த குருவிகளை லாரி லாரி அனுப்பி ஊருக்கு வெளியே புதைத்து விடுவார்கள். இது போன்ற நிகழ்வுகள் மக்களின் தினசரி ஹாபியாகவே மாறிப்போனது.இப்படி ஒரு நாள் இல்லை இரண்டு நாட்கள் இல்லை, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் இந்த the great sparrow campaign வெற்றிகரமாக நடந்தது. சுமார் 75 மில்லியன் குருவிகள் அழிக்கப்பட்டன. (Refer the video below).

அப்பாடா குருவிகள் தொல்லை இனி இல்லை , விவசாயம் கொடிகட்டி பொறக்க போகிறது சீனாவில் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இப்புரட்சின் விளைவுகள் 1960ல் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்தது. எதிர்ப்பார்த்தற்கு நேர் எதிராக விவசாயத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது சீனா. நல்ல மழை இருந்தும் பயிர்கள் செத்து மடிந்தன. பின்னர் தான் அரசுக்கும் மக்களுக்கும் உரைத்தது, குருவிகள் தானியத்தை மட்டும் தின்னவில்லை, வயலில் உள்ள பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்றவைகளையும் சேர்த்தே உண்ணும் என்று. இப்போது குருவிகள் இல்லாததால் பூச்சிகளின் பெருக்கம் பன்மடங்கு உயர்ந்தது. விளையும் பயிர்களை கூட்டம் கூட்டமாக சர்வநாசம் செய்தன. எவ்வளவு முயற்சி செய்தும் பயிர்களை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. 


விளைவு, சீனாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. விலைவாசி மிகக்கடுமையாக அதிகரித்தது. அடுத்த வேளை உணவுக்காக மக்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தன் முட்டாள் தனமான முடிவால் மக்கள் கொத்து கொத்தாக மடிவதை மாவோவால் தடுக்கமுடியவில்லை. பசி தாங்கமுடியாமல் பல பேர் தற்கொலை செய்துகொண்டனர். அடுத்த இரண்டு வருடங்களில் பஞ்சத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 45  மில்லியனை தொட்டது. இது அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை தான். நிஜத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கும். வேறு வழியின்றி சிட்டுக்குருவிகளை பல நாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு சீனா தள்ளப்பட்டது. The Great Sparrow campaign ஆக ஆரம்பித்தது The Great Famine ஆக முடிந்தது.

இயற்கைக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயலும் மனிதர்களால் தாங்க முடியாத விளைவினை கொடுக்கும் என்பதற்கு இது ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.  2.O படத்தில் சொல்வது போல தான். "இங்க  மனுஷங்க உயிரோட இருக்கணும்னா பறவைகளும் இருக்கணும்" "The World is not just for human".

புல்லினங்கால் ! புல்லினினங்கால்!!

-மணி


Saturday, July 30, 2016

சுந்தரம் ஒரு கேள்விக்குறி?

                        
    அந்த தெருவில் எத்தனையோ வீடுகள் இருந்தாலும் சுந்தரத்தின் குடிசைக்கு மட்டும் ஒரு தனித்துவம் தெரியும். பொதுவாக வீட்டு சுவர்களில் கட்சி சின்னம், கண் திருஷ்டி படம், விளம்பரம் செய்யாதீர்கள் என ஏதாவது ஒன்றை நாம் பார்க்கலாம். ஆனால் சுந்தரத்தின் வீட்டு சுவற்றில் சோலார் சிஸ்டம் பற்றிய குறிப்பு,ஆபிரஹாம் லிங்கன், ஜான் கென்னடி பற்றிய தகவல், ஆங்கில கவிதைகள், புரியாத பல (x+y)2 சமாச்சாரங்கள் என ஒரு ஸ்கூல் ப்ளாக் போர்ட் மாதிரி அந்த வெள்ளை சுவர் பல தகவல்களை தாங்கிக்கொண்டிருக்கும். ஒரு முறை நெல்சன் மண்டேலா ஓவியம் கூட வரைந்திருந்தார். இவையனைத்தும் சுந்தரம் ஏனோ தானோ என்று கிறுக்கி வைத்துவிடவில்லை. ஒரு புரொபெஷனல் வால் பெயிண்டர் எழுதியதுபோல் அத்தனை நேர்த்தி. சமயத்தில் பெயிண்ட் இல்லை என்றால் அடுப்புக் கரி கொண்டு எழுதுவார். அடிக்கடி அந்த சுவர் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். ஆனால் இதையெல்லாம் எப்போது செய்கிறார் என்பது தான் யாருக்கும் தெரியாது.

சுந்தரம். ஊரை பொறுத்தவரை ஒரு பைத்தியம். நன்றாக படித்த அறிவாளி.படித்து படித்தே மூளை குழம்பியவன். மனுஷங்கள பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது. அதனால் தான் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேங்கிறான். இப்படி சுந்தரத்தை பற்றி பல  கருத்துகள் வீராணத்தை சுற்றி வரும். வீராணம் சேலம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம்.

அவர் வீட்டு கதவு எப்போதும் உள் தாழ் போட்டே இருக்கும். மனுஷன் யார் கண்ணிலும் பட மாட்டார். அவ்வப்போது வெளியூருக்கு  சிற்றாள்(சிட்டாள்) வேலைக்கு சென்று வருவதாக  ஊருக்குள் பேசிக்கொள்வார்கள். அந்த கிராமத்தில் பல பேருக்கு அவர் எப்படி இருப்பார் என்பதே தெரியாது. மீதி சிலரும் சுந்தரம் காலேஜ் படித்த காலத்தில் பார்த்ததோட சரி. ஊருக்குள்ள புதுசா யாரவது 30-35 வயசுல பழைய சட்டைய போட்டுட்டு வந்தா போதும், அந்த ஆள் தான் சுந்தரமா இருப்பாரோனு காதுக்குள் கிசுகிசுத்துவிட்டு வேற்றுகிரகவாசிய பார்க்கற மாதிரி ஏற இறங்க பார்ப்பாங்க. அந்த அளவிற்கு சுந்தரத்தின் பேரில் ஒரு ஆர்வம் அந்த கிராமத்து மக்களுக்கு. சுந்தரத்தின் வீட்டிற்கு பின்னால் 150-160 அடி தூரத்தில் கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த கிணறு ஒன்று இருக்கும். ஒரு காலத்தில் இந்த கிணற்றை நம்பி பல ஏக்கர் விவசாய நிலம் இருந்திருக்க வேண்டும். அகன்ற கிணறு! பின்னாளில் யாருக்கும் பயன்படாத அந்த கிணறு சுந்தரத்திற்கு மட்டும் பயன்பட்டது. அந்த கிணற்று நீர் தான் பல ஆண்டுகள் அவருடைய தாகத்தை தீர்த்தது. வீட்டைவிட்டு வெளியே வராத சுந்தரம் எப்படி அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்தார். அது தான் சுந்தரம். தனது வீட்டிற்குள் இருந்தே கிணறு வரைக்கும் ஒரு சுரங்கப்பாதை வெட்டியுள்ளார். பல ஆண்டுகள் யாருக்கும் இது தெரியாது. ஒரு முறை ஆட்டுக்குட்டி ஒன்று அந்த கிணற்றில் விழுந்துவிட்டது, அதை காப்பாற்ற ஊர்க்காரர்கள் இறங்கிய போது தான் அந்த சுரங்கப்பாதையை பார்த்தனர்.ஆனால் யாரும் அதற்குள் சென்று பார்க்கவில்லை.ஏதோ ஒரு தயக்கம், பயம்.

சுந்தரம் ஒரு நாளைக்கு ஒரு முறை தான்(இரவு) தான் சாப்பிடுவார். அவர் குடிசையின் திண்ணையில் எப்போதும் ஒரு தட்டு இருக்கும் . அந்த பகுதியில் யாராவது ஒருவர் தினமும் அதில் சாப்பாடு வைத்துவிடுவார்கள். ஊர் அடங்கியதும் எடுத்து சாப்பிடுவார். சரி , சாப்பாட்டை எடுக்கும்போதாவது அவரை பார்க்கலாம் என்றால் கையை மட்டும் நீட்டியோ அல்லது கம்பியால் தட்டை இழுத்து கொள்வார். காலையிலோ மதியமோ வைத்த உணவை அவர் எடுத்ததில்லை, அதனால் இரவு மட்டும் தான் சாப்பாடு வைப்பார்கள். எப்போதாவது தானே சமைத்து சாப்பிடுவார். வீட்டுக்கூரையில் இருந்து வரும் புகை தான் அவர் சமைக்கிறார் என்பதற்கு சிக்னல். சமைப்பதற்கு தேவையான பொருட்களையெல்லாம் எப்போ எப்படி வாங்குறார் என்று அந்த கிராமமே தலையைப் பிய்த்துக்கொள்ளும்.

ஒரு முதுகலை பட்டம்(M.A English Literature) பெற்ற ஒருவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என கேட்டால் ஊரில் ஆளுக்கு ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள். பெற்றோர் இறந்த பிறகு மனைவி தன்னை பிரிந்து சென்று விட்டதால் இப்படி ஆகிவிட்டது எனவும், அவர் நல்ல படிப்பாளி அதிகம் படித்து படித்தே மூளை கோளாறு ஆகிவிட்டது என்றும், பேய் பிடித்ததனால் இப்படி ஆகிவிட்டார் எனவும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சுந்தரத்திற்கு சொந்த பந்தங்கள் பலர் இருந்தும் யாரும் இவரை எட்டிப்பார்ப்பதில்லை. இவர் வீட்டைவிட்டு வெளியே வராத ஆரம்ப நாட்களில் சிலர் வந்து இவருடன் பேசி பார்த்தனர், கல்லால் அடித்தே அவர்களை விரட்டிவிட்டார் மிஸ்டர் சுந்தரம். அவர் தங்கியிருந்த வீடு,கிணறு அதை சுற்றியுள்ள நிலம் எல்லாம் சுந்தரத்திற்கு சொந்தமானதுதான். இப்படியே பதினைந்து வருடங்கள் உருண்டது. 


ஒரு நாள் சுந்தரம் தனது இரவு உணவை எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் இரண்டு நாள் ஆனது, இரண்டு மூன்று ஆனது. இதனால் ஊர்மக்கள் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்ப்பதென்று முடிவெடுத்தனர். முதலில் கதவை பலமாக தட்டி பார்த்தனர், உள்ளே இருந்து எந்த சலனமும் இல்லை  (வழக்கமாக யாரவது இப்படி கதவை தட்டி தொந்தரவு செய்தல் உள்ளே இருந்து ஆக்ரோஷமாக அவர் கத்துவார்). பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.பல வருடங்கள் காற்றோ வெளிச்சமோ படாததால் துர்நாற்றம் குடலை பிறட்டியது.உள்ளே  சென்ற அனைவரும் வாயடைத்து போனார்கள். நட்ட நடு வீட்டில் ஒரு ஆழமான குழி இருந்தது. இருட்டில் ஆழம் சரியாக தெரியவில்லை. இதனால் ஒரு நீளமான கயிற்றில் தீப்பந்தத்தை கட்டி குழியில் இறக்கினார்கள். 70-75 அடி ஆழம் சென்றவுடன் தீப்பந்தம் அணைந்து விட்டது. மேலே கயிற்றை இழுத்து பார்த்தபோதுதான் தெரியவந்ததுது, தீப்பந்தம் தண்ணீரில் நனைந்து போயிருந்தது. ஆம், வீட்டிற்குள் ஒரு கிணறே வெட்டிவைத்திருந்தார். மேலும் வீட்டிற்குள் ஒரு சிறிய நூலகமே வைக்கும் அளவிற்கு புத்தகங்கள் குப்பைபோல் குவிக்கப்பட்டுஇருந்தது. உடைந்த விறகுஅடுப்பு, சமைப்பதற்கு தேவையான சில பாத்திரங்கள், மண்ணெண்ணெய் விளக்கு, எலிகள் குடியிருந்த மர பீரோ, சில வேஷ்டி சட்டைகள் அதில் கொஞ்சம் பணம் என ஒவ்வொன்றையும் அதியசமாக பார்த்தனர். ஆனால் சுந்தரத்தை மட்டும் காணவில்லை. எங்கே அவர்? வேலைக்கு எங்காவது போய்விட்டாரா? இல்லை கிணற்றுக்கு செல்லும் சுரங்கத்திற்குள் ஒழிந்திருக்கிறாரா என்று சுரங்கப்பாதையை தேடி கண்டுபிடித்தனர். வீட்டின் பின்புற மூலையில் இருந்தது அந்த சுரங்கத்தின் வாயில்.

 அந்த கரடுமுரடான சுரங்கத்தில் சற்று தூரம் சென்றதும் ஒருவர் உட்கார்ந்து இருப்பதை பார்த்ததும் ‘சுந்தரம்’ ‘சுந்தரம்’ என அங்கே சென்றவர்கள் கூப்பிட்டனர். பதில் ஏதும் வராததால், அடித்த துர்நாற்றத்தில் மூக்கைப்பிடித்தபடி அருகில் சென்று தொட்டு பார்த்தனர். சுந்தரத்தின் உடல் மரத்துப்போயிருந்தது. அமர்ந்திருந்த வாக்கிலேயே இறந்திருந்தார். நீண்ட தாடி, பிசிறு தட்டிய சிக்கு முடி கிழிந்த வேஷ்டி.இப்படி இறந்திருந்த சுந்தரத்தை பார்க்க அந்த ஊர் மக்கள் மட்டுமின்றி பக்கத்து ஊரிலிருந்தும் வந்திருந்தனர். ஊர்க்காரர்களே சேர்ந்து அடக்கமும் செய்தனர். பல வருட புதிர் விடை தெரியாமலே மண்ணுக்குள் புதைந்தது. சில நாட்கள் கழித்து சுந்தரத்தின் சொந்தங்கள் என்று சிலர் வந்து வீட்டை இடித்து கிணற்றை மூடி பிளாட் போட்டு நிலத்தை விற்றுவிட்டனர்.பள்ளி நாட்களில் வீராணத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். சுந்தரம் வீட்டின் எதிர் வீடு தான் என் உறவினர் வீடு. இதனால் வீராணம் பற்றிய ஞாபகம் எப்போது வந்தாலும் சுந்தரத்தின் ஞாபகமும் வந்து ஒட்டிக்கொள்ளும். அவர் சுவறில் எழுதியதை படிப்பது, ஜன்னல் வழியே அவரை பார்க்க முயன்றது, ஊர்க்காரங்க அவரைப்பற்றி பேசுவதை ஆர்வமுடன் கேட்பது என பழைய ஞாபகங்களுடன், இந்த முறை எப்படியாவது சுந்தரத்தை பார்த்துவிடவேண்டும் என்று சமீபத்தில் வீராணம் சென்றபோதுதான் அவர் இறந்துபோனதும், மேலே குறிப்பிட்ட தகவல்களும் தெரியவந்தது. சுந்தரம் குடிசை மற்றும் கொல்லைபுற  கிணறு இருந்த இடத்தில் இப்போழுது சில வீடுகள் முளைத்துத்திருந்தன. எத்தனை மாற்றம் வந்தாலும் ‘சுந்தரம் வீடு’ என்ற அடையாளம் மட்டும் மாறவில்லை. அந்த தெருவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. யாராவது வீராணம் சென்று போலீஸ் ஸ்டேஷன்க்கு எப்படி போகணும்னு கேட்டால் ‘சுந்தரம் வீட்டை தாண்டி போகணும்’னு சொல்வார்கள்.  

-மணி