Tuesday, November 5, 2013

கல்லறைக்குள் உலகம்:THE MUMMY (THE END)



அகேநேடனை கி.மு 1334 ம் ஆண்டு திடீரென மரணம் தழுவியது,இவர் இறந்ததற்கான காரணம் சரியாக தெரியவில்லை.இதனால் இவரின் வாரிசு டூத்தாங்மென் அடுத்த அரசராக அரியணை ஏறினார்.அப்போது வயது ஒன்பது தான்.அரசர் இவர் தான் என்றாலும் இளவயது காரணமாக உண்மையான அதிகாரம் என்னவோ மெய்க்காப்பாளர் அய்(Ay) என்பவரிடமும்,டூட்டின் பெரியம்மா நெபர்டிடியிடமும்(Nefertiti)(அப்பா அகேநேடனின் முதல் மனைவி) தான் இருந்தது.ஷோகேசில் இருக்கும் பொம்மை போலதான் டூட் அரியணையை அலங்கரித்தார்.அரசரான சில மாதங்களில் திருமண வைபவம் நடந்தேறியது.
மனைவியுடன் டூட்
மணமகள் யாருமில்லை தன் சகோதரியே தான்,பெயர் அங்கேசெநமன்(Ankhesenamun).டூட்டின் அப்பாவும் அம்மாவும் கூட உடன்பிறந்த அண்ணன்-தங்கையாக இருந்து மணமக்களாக ஆனவர்கள் தான்.இந்த கலாச்சார வழக்கம் நமக்கு வேண்டுமானால் விநோதமாகவும்,சங்கடமாகவும் இருக்கலாம்.ஆனால் அக்கால எகிப்திய நம்பிக்கையின்படி அரசபரம்பரை கடவுளின் புனித ரத்தத்தில் உருவானது என்றும்,இதனால் குடும்பத்தை தாண்டி வேறு உறவுகளில் திருமணம் செய்தால் அந்த புனிதம் கெட்டுவிடும் என்றும் எண்ணியே தன் சகோதர-சகோதரிகளையே திருமணம் செய்து வந்துள்ளனர்.

என்னதான் அரசனாக இருந்தாலும்,திருமணம் ஆகியிருந்தாலும், டூட்டிடம் அந்த குழந்தைத்தனமும்,விளையாட்டுதனமும் அவரை விட்டு போகவில்லை.செநெட் எனப்படும் ஒரு வகை விளையாட்டை அவர் விரும்பி விளையாடுவாராம்.ஒரு கையில் வில்லும் மறு கையில் செனட் போர்டும்(செனெட் என்பது நம்ம ஊர் பல்லாங்குழி மாதிரி) அவரிடம் எப்போதும் இருக்கும்.இவ்வளவு ஏன் சில நேரங்களில் அரியணையில் இருக்கும்போதே மந்திகளுடன் விளையாட ஆரம்பித்து விடுவாராம்.அதற்காக இவரை இம்சை அரசன் புலிகேசி லிஸ்டிலும் சேர்த்துவிட முடியாது.
போர்களத்தில் டுத்தாங்கமென்
இவரது காலத்தில் அப்பா செய்த மதம் ரீதியான தவறுகளை சரிசெய்து மீண்டும் சூரியகடவுளின் கோவிலையும் கட்டிகொடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்றார்.நூபியன்களுக்கு(பக்கத்து தேசம்) எதிராக யுத்தம் செய்து வெற்றிபெற்றார்.வணிகத்தை பெருக்குவதர்க்கு தேவையான புதிய தரைவழித் தடங்களை ஏற்படுத்தினார்.எல்லாவற்றிற்கும் மேலாக தலைநகரத்தை மெம்பிஸ்க்கு(Memphis) மாற்றினார்(இவரது அப்பா அரசராய் இருந்தபோது காலம் காலமாக தலைநகரமாக இருந்த மெம்பிஸை அழித்து,அமர்நா என்ற புதிய தலைநகரை ஏற்படுத்தினார்,இந்த செயல் மக்களிடம் வெறுப்பை அதிகரித்தன).எதிர்காலத்தில் உலகம் போற்றும் மன்னராய் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட டுத்தாங்கமென் கி.மு 1325ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார்.இவர் இறந்ததற்கான காரணம் சரிவர தெரியவில்லை. 2010ல் நடந்த DNA ஆய்வின் முடிவில் மலேரியாவால் இறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
மேலும் இவரது காலில் எலும்பு முறிவும்,தலையில் அடிபட்டதற்கான அடையாளங்களும் இருப்பதால் டூட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கின்றனர்.ஒருவேளை அப்படி இவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும்.?டூட்டின் மனைவியான அங்கேசெநமனுக்கும்,அவரது மெய்க்காப்பாளர் அய்க்கும்(AY) இடையே கள்ளகாதல் இருந்ததாகவும்,இதற்கு தொல்லையாக டூட் இருந்ததால் கொலைசெய்யபட்டார் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.எது எப்படியோ டுத்தாங்கமேன் இறந்தபிறகு அங்கேசெநமனுக்கும் அய்க்கும் சீரும்சிறப்புமாக திருமணம் நடந்தது.இதன்பிறகு இந்த இருவரை பற்றியும் எந்த ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை.        

டுத்தாங்கமென் கால வரலாற்றில் எத்தனையோ புகழ் பெற்ற மன்னர்கள் இருந்தாலும்,இவரை பற்றி மட்டும் குறிப்பிட்டு சொல்லக்காரணம்,மண்ணில் தோண்டியெடுத்த மம்மிகள் அனைத்தும் சிதைந்து போயும்,திருடர்களால் அழிக்கப்பட்டும்தான் கிடைத்தன.ஆனால் டுத்தாங்கமெனின் கல்லறை மட்டும் தான் பொக்கிஷங்களுடன் முழுதாக கண்டெடுக்கப்பட்டது.இவர் வாழ்ந்தது 19 ஆண்டுகள் தான் என்றாலும் 3300 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்தின் பழம்பெருமை,கலாச்சாரம்,நாகரீகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றை இன்று நாம் தெளிவாக தெரிந்துகொள்ள ஒரு நூலகம் போல் உதவியது இவரது கல்லறை என கூறலாம்.லண்டன் மியூசியத்தில் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இன்றும் கதைசொல்லிகொண்டிருக்கிறார் இந்த மரியான் டுத்தாங்கமென்.

இத்துடன் கல்லறைக்குள் உலகம்:THE MUMMYமுடிவடைகிறது,நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்திருக்குமென நம்புகிறேன்.இத்தொடரை தொடர்ந்து படித்துவந்தும்,நிறைகுறைகளை கூறியும்,பாராட்டி ஊக்கபடுத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

எழுத்து : மணி மாணிக்கம்







Close [x]