Tuesday, May 24, 2016

இந்தியனும் வள்ளுவனும்

                                       
                                   
நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘இந்தியன்’ படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அப்படத்தில் கொலை செய்ததற்காக கமல்ஹாசனை கண்டுபிடிக்க போலீஸ் ஒரு லெட்டர்-ஐ வைத்து ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் “மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு” என்று எழுதப்பட்டிருக்கும். இதில் உள்ள “உனக்கு” என்ற வார்த்தையை வைத்து கொலையாளி ஒரு வயதானவர் என்று ஊர்ஜிதப்படுத்தி அதற்கான விளக்கமும் தருவார் அந்த போலீஸ். அதாவது “க்” ன்னாவையும் “கு” வன்னவையும் சேர்த்து எழுதும் பழக்கம் 1940 களிலேயே வழக்குடைந்து போனதை விவரிப்பார்.
  
                           
                                         

இந்த விஷயம் சற்று யோசிக்க வைத்தது.எத்தனை எழுத்துக்கள் இது போன்று மறைந்திருக்கும் அல்லது புது வடிவம் பெற்றிருக்கும்? ஏன்? இதை அறிய முயன்ற போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அதில் ஒரு சிலவற்றை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.... 

சற்று பின்னோக்கி போனால், எந்த ஒரு ஓலைச்சுவடியிலோ அல்லது கல்வெட்டிலோ மெய்யெழுத்தின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை. காரணம் எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதும் போது புள்ளி வைத்தால் ஓலையில் ஓட்டை விழுந்து கிழிந்து விட வாய்ப்புள்ளது, அதே போல் உளி கொண்டு கல்வெட்டு பொரிக்கும் பொழுது உளியால் அடிக்கடி புள்ளியிட்டால் அந்த கல் சேதாரமாக அதிக வாய்ப்புண்டு, எனவே தான் கல்வெட்டிலும் ஓலையிலும் பெரும்பாலும் புள்ளி இடுவதில்லை. பின் எப்படி அர்த்தம் புரிந்து படித்திருப்பார்கள்? எல்லாம் ஒரு அடிப்படை அறிவு தான். எடுத்துக்காட்டாக “நன்றி” என்பதை “நனறி” “வணக்கம்” என்பதை “வணககம” என்றுதான் எழுதுவார்கள். படிப்பவர்கள் அதை புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.,

                             

மேலும் ‘ஈ’ என்ற எழுத்தை ‘இ’ க்கு மேல் ஒரு சுழி போட்டும் எழுதியிருக்கிறார்கள். தற்போது நாம் நெடில் எழுத்தை குறிக்க பயன்படுத்தும் ரெட்டை கொம்பு எழுத்துக்களும் அப்போது இல்லை.(எ.டு): ”கே” “மே” “கோ”, “போ”, “லோ”. என்பதையும் “கெ” “மெ” “கொ”,”பொ”,”லொ” என்றே குறிப்பிடுவர்.

தொல்காப்பியர் காலத்திற்கு பிறகு தமிழ் எழுத்துக்களில் பெரிதாக மாற்றமேதும் வந்துவிடவில்லை. இப்போது நாம் பயன்படுத்தும் நவீன எழுத்திற்கான மாற்றத்திற்கு வித்திட்டவர் வீரமாமுனிவர். இதில் என்ன ஆச்சர்யமென்றால் இவர் ஒரு இத்தாலி நாட்டுக்காரர்.தாய் மொழி ஆங்கிலம். இவரின் இயற்பெயர் Constantine Joseph Beschi. இவர் தமிழகத்திற்கு வந்த காரணம் என்னவோ கிறிஸ்தவ மதத்தை பரப்பதான். தமிழைக் கற்றுக்கொண்டால் மக்களுடன் நெருக்கமாக பழகி விரைவாக கிறிஸ்தவத்தை பரப்பலாம் என்று எண்ணியே தமிழைக் கற்று கொண்டார்.    (பின் தமிழ் மீது கொண்ட காதலினால் இங்கேயே செட்டிலாகி பல தமிழ் நூல்களை எழுதினார்) தமிழில் உள்ள சில எழுத்துக்களை எளிமை படுத்தினார். இவரின் இந்த மாற்றத்தினால் தமிழ் இலக்கண விதிகளில் எந்தவித பிழையும் ஏற்படவில்லை என்பது சிறப்பு. வீரமாமுனிவரால் செய்யப்பட்ட மாற்றங்கள்
                                                        :
                                 
                   பின்னாளில் தட்டச்சு இயந்திரம் வந்த பிறகு இது போன்ற சில எழுத்துக்களை அச்சிடும் போது உள்ள சிரமத்தை போக்க நவீன எழுத்துக்கள் தந்தை பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக உருவான எழுத்துக்களே ‘லை’ ‘ளை’ ‘னை’ ‘னண’ போன்ற 13 எழுத்துக்கள். நமக்கு தெரிந்த ஒரு திருக்குறளை பழைய தமிழ் எழுத்துக்களில் எழுதிபார்த்தல் என்ன என்று தோன்றியது. இதோ...
                           

திருக்குறள் என்றதும் திருவள்ளுவரைப் பற்றி ஒரு கொசுறு செய்தி. எந்த புத்தகத்தில் படித்தாலும் வள்ளுவரை பற்றி பின்வருபவை பொதுவாக சொல்லப்படுகிறது.
அவர் மயிலாப்பூர் காரர், நெசவுத்தொழில் செய்தார், மனைவியின் பெயர் வாசுகி, ஆனால் இது உண்மை தான் என்பதற்கு ஆணித்தரமான ஆதாரமில்லை. அதாவது திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார் (ஆதாரம்: திருவள்ளுவமாலை என்ற நூல்) என்பதை தவிர வேறு எதற்கும் சரியான ஆதாரமில்லை அல்லது அவரை பற்றி எதுவும் தெரியவில்லை. அப்படியிருக்க இன்றைக்கு சிலையாக, போட்டோவாக இருக்கும் திருவள்ளுவர் உருவம், இவர் இப்படித்தான் இருந்தார் என்பது மட்டும் எப்படி தெரிந்தது. அதுவும் யாருக்கும் தெரியாது என்பதே உண்மை. திருவள்ளுவருக்கு இந்த உருவம் கொடுத்து ஐம்பது ஆண்டுகள் தான் ஆகிறது. இளைய தலைமுறையினர் மனதில் பதியவைக்கவும், பிறநாடுகளில் வள்ளுவரின் புகழை பரப்பவும் ஒரு அடையாளம் தேவைப்பட்டதின் விளைவு தான் இப்போதுள்ள கற்பனை வள்ளுவர். ராமநாதபுரம் ஜமீன் பரம்பரையை சேர்ந்த ஒருவரின் ஓவியத்தை மாடலாக கொண்டு, தாடி, கொண்டை, கையில் ஓலை மற்றும் எழுத்தாணி சேர்த்து வரைந்து வந்தவர் தான் இப்போதுள்ள வள்ளுவர். 

இதன்பிறகு வெகு எளிதாக திருவள்ளுவர் எல்லோரிடத்திலும் சேர்ந்தார் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? துரோகம் தெரியுமா? என்று அப்போது பலர் கூப்பாடு போடாமல் இல்லை. பல எதிர்ப்புகளும் வந்தது. பின் வழக்கம்போல் காலப்போக்கில் மறந்துவிட்டு அடுத்த பிரச்சினைக்கு போய்விட்டனர். 
கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று யாரவது பார்த்தா இத்தனை கடவுளின் வடிவம் வைத்து வணங்குகிறோம், அனைத்து கடவுளின் வடிவமும் மனிதனின் கற்பனை சக்தி தானே! அதிக மொழிகளில் அச்சிடப்பட்ட தமிழ் புத்தகம் என்ற பெருமைக்குரிய தத்துவ நூலை கொடுத்தவருக்கு இதை கூட செய்யவில்லையென்றால் எப்பூடி?

எண்ணமும் எழுத்தும்
-மணி



Sunday, February 23, 2014

தீர்ப்புகள் திருத்தப்படலாமா..?

மரணதண்டனை,குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு வழங்கும் உச்சபட்ச தண்டனையாக உலகின் பல நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றது.எந்த ஒரு விஷயத்திலும் இரு வேறு கருத்துக்கள் இருக்கும்,மரணதண்டனையும் இதற்கு விதி விலக்கல்ல.இன்றைய உலகில் இது அவசியமானது, அவசியமற்றது என வாதங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

இன்றைய நிலையை ஒப்பிடும் போது 50,60 ஆண்டுகளுக்கு முன் வரை மரணதண்டனை மிக சாதரணமாக நடந்தேறியுள்ளது.சர்வாதிகாரத்தில் திளைத்த ஹிட்லர்,முசோலினி இடியமின்(சதாமையும் இதில் சேர்க்கலாம்) போன்றோரெல்லாம் மரணதண்டைனை வழங்குவதை ஒரு ஹாபியாகவே செய்துகொண்டிருந்தனர்.இவர்களுக்கு இந்த தீர்ப்பை கொடுக்க பெரிதாக காரணம் ஒன்றும் தேவைப்படவில்லை,தனக்கு பிடிக்காதவர் எவரேனும் தும்மினால் கூட,ஒரு வழக்கை ஜோடித்து ''ஜனநாயக முறை''ப்படி பல வகைகளில் சொர்க்கவாசலுக்கு டாட்டா சொல்லி அனுப்பிவிடுவர்.தூக்கிலிடுதல் சுட்டுதல்லுதல்,எலெக்ட்ரிக் ஷாக்,விஷம் கொடுப்பது,ஓபியம்(கஞ்ஜா மாதிரியான போதை வஸ்து) கொடுத்து சிறுக சிறுக கொல்வது,தலையை வெட்டுதல்,விஷபுகையை பரப்பி கொல்வது உயிர் போகும் வரை கல்லால் அடித்தே கொல்வது என பல முறைகளில் மரணதண்டனை கொடுக்கப்படுகிறது.இவற்றில் பெரும்பான்மையானவை இன்றும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரான் இராக், சவுதிஅரேபியா,பாகிஸ்தான்,சிரியா போன்ற நாடுகள் அதிக மரணதண்டை கொடுப்பதில் போட்டி போட்டுகொண்டு முன்னணியில் இருக்கின்றன.

இது போன்ற மிருகத்தனத்தை பார்த்து கொதித்த மனித உரிமையாளர்கள்  மரணதண்டனையை கைவிட வேண்டுமென உலகமெங்கும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்,இன்றும் கொடுத்துகொண்டே இருக்கின்றனர்.இது ஒரு மூர்க்கத்தனமான செயல்,ஒரு அரசே தன் மக்களை கொல்லக்கூடாது,
கண்ணுக்கு கண்,கொலைக்கு கொலை எந்த விதத்திலும் தர்மம் ஆகாது,இப்படி செய்வதால் ஆத்திரத்திலும்,அறிவிழந்தும் குற்றம்செய்யும் குற்றவாளிக்கும்,நீதித்துறைக்கும் என்ன வித்தியாசம் என்பது இவர்களின் வாதம்.இவர்களின் தொடர் போராட்டங்களினால் இன்று நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் அஹிம்சை நாடான இந்தியாவில் மரணதண்டனை இன்னும் வழக்கில் இருப்பது பல நாடுகளை ஆச்சர்யப்படுத்துகிறது.இந்தியாவை பொறுத்தவரை மரணதண்டனை தூக்கிலிடுதல் மூலமாக நடைமுறையில் உள்ளது.இந்தியாவின் முதல் தூக்குதண்டனை கைதி காந்தியை சுட்டு கொன்றதற்காக கோட்சேவிற்கு 1949 ல் நிறைவேற்றப்பட்டது.இதுவரை 53 பேர் இந்தியாவில் தூக்கிலிட பட்டுள்ளனர்.நம் தேசத்தை பொறுத்தவரை தூக்குதண்டை என்பது மிக மிக அரிதான வழக்குகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. 416 பேர் தீர்ப்பு பெற்று தூக்குமேடையை நோக்கி காத்திருக்கின்றனர்.இவர்களில் சிலர் 1990 களில் தீர்ப்பு பெற்று,கருணை மனு
எழுதி இன்னும் ஜனாதிபதியின் முடிவை எதிர்நோக்கியுள்ளனர்.பிரதிபா பாட்டில் ஜனாதிபதியாக இருக்கும் போது 30 பேரின் கருணை மனுக்களை ஏற்று அவர்களின் தண்டனையை குறைத்துள்ளார்.

கொஞ்சம் யோசித்து பார்த்தல் மரணதண்டனை அவசியம் என்றே தோன்றுகிறது,எடுத்துக்காட்டாக இந்த 30 பேரில் கடவுளுக்கு பலி கொடுக்கிறேன் என்று 5 குழந்தைகளை கொன்றவன்,பணத்திற்காக 3 வயது சிறுவனை கடத்தி,சித்ரவதை செய்து கொன்றவன்,போதையில்
மனைவியை கொன்றுவிட்டு(மனதை இரும்பாக்கி கொள்ளுங்கள்) தன் சொந்த 10 வயது மகளையே கற்பழித்து கொன்றவன் ஆகியோரும் அடங்குவர்.இது போன்ற ஒவ்வொரு குற்றபின்னணியையும் பார்க்கையில் இவர்களை மன்னிப்பதே பாவம் ,மரணதண்டையும் தேவை என்றே மனம் சொல்கிறது.மும்பை தாக்குதலில் 200 மேற்பட்ட மக்களின் சாவுக்கு காரணமான கசாப்-ஐ தூக்கில் போட்டது எந்த விதத்தில் தவறு..அவனை ஜெயிலில் அடைத்து வேளா வேளைக்கு சோறு போட்டிருந்தால் தான் நியாயம் ஆகுமா..நாட்டையே குலுக்கிய டெல்லி மாணவி பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களின் மேல் கருணை காட்டலாமா..ஒரு உயிரை கொல்வது பாவம் என்றாலும்,உரிமையில்லை என்றாலும் வயலில் முளைத்திருக்கும் தேவையற்ற களையை பிடுங்கி எறிவதில் தவறேதும் இல்லை
என்றே தோன்றுகிறது.

ஒரு படத்தில் விவேக் சொல்வார்,''தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்" என்று..அவர் அதை நகைச்சுவை காட்சியில் சொல்லியிருந்தாலும் கொஞ்சம் சீரியசாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய வரி இது.


Source Links:
http://en.wikipedia.org/wiki/List_of_methods_of_capital_punishment
http://www.virakesari.lk/?q=node/359478
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121213_indiadeathrow.shtml



Sunday, December 15, 2013

சூது கவ்வும்

மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் என்றுமே ஏழாம் பொருத்தம்தான்,மதம் சொல்வதை விஞ்ஞானம் நம்பாது,விஞ்ஞானம் சொல்வதை மதம் ஏற்காது.பகுத்தறிவு வளர்ச்சியடைந்த(ஓரளவிற்கு) இந்த காலத்திலேயே இப்படி என்றால் 370 வருஷத்திற்கு முன்னால் சொல்லவாவேண்டும்.அப்படி உண்மையாக இருந்தும்கூட மத ஆதிக்கத்தின் முன் அறிவியல் மண்டியிட்ட ஒரு சம்பவத்தை தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம்.

கலிலியோ...நவீனவானியல் ஆய்வுகளின் தந்தை...இத்தாலியில் பிறந்த இயற்பியலாளர், வானியல்வல்லுநர், தத்துவஞானி.வானியல் துறையில் பல புரட்சிகள் செய்தவர்.அறிவியல் அறிஞர் கோபர்நிக்கஸ் கூறிய “சூரியனே மையபுள்ளி,அதை சுற்றியே மற்ற கோள்கள் இயங்குகின்றது” என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டு கலிலியோ எழுதிய புத்தகம் தான் “Dialogue Concerning the Two Chief World Systems”.இந்த புத்தகத்தில் “சூரியன் பூமியை சுற்றவில்லை,பூமியும் பிற கோள்களும் தான் சூரியனை மையமாக வைத்து சுற்றி வருகின்ற” என்று பல விளக்கங்களுடன் விவரித்திருந்தார்.விவகாரம் இங்கு தான் ஆரம்பித்தது.அப்போதைய கத்தோலிக்க கிறுத்துவ சபை இதை ஏற்கவில்லை,மேலும் இப்படி சொல்வது மத புனிதத்தை கெடுக்கும் செயல் என்றும்,மத குற்றம் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இதனால் கலிலியோ இத்தாலியிலிருந்து வாடிகன் நகருக்கு அழைத்துவரப்பட்டார்.1633 ம் ஆண்டு ஜூன் மாதம் கத்தோலிக்க கிறித்துவ சபையில் வழக்கு நடந்தது.அப்போதைய போப் அர்பன் VIII ன் முன்னால் கலிலியோ நிறுத்தப்பட்டார்.கலிலியோ தன் தரப்பு நியாங்களையும் அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் எவ்வளவோ எடுத்துக்கூறினார்.ஹுஹும்,பலன் இல்லை.இறுதில் தீர்ப்பு கலிலியோவிற்கு எதிராகவே அமைந்தது.

அதாவது மத புனிதத்தை அசுத்தப்படுத்தியதர்க்கும்,மக்கள் நம்பிக்கையை குலைக்க முயன்றதற்கும் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது.அதோட விட்டாங்களா,பூமி சூரியனை சுற்ற வில்லை,சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்று சபையில் உரக்க சொல்லவேண்டும்,அப்படி சொல்லும்வரை சவக்கடி தண்டை தந்தனர்.தண்டனை ஆரம்பிக்கப்பட்டது,ஒன்று,இரண்டு,மூன்று என்று சவுக்கடிகள்விழ ஆரம்பித்தது.

ஓர் அறிவியல் அறிஞருக்கு உலக உண்மையை எப்படி மாற்றி சொல்ல மனம் வரும்.சொல்லமாட்டேன் என்று மறுத்தார்.மேலும் மேலும் சவுக்கடிகள் விழ ஆரம்பித்தன,அந்த எழுபது வயது கலிலியோவால் இதற்கு மேல் அடிகளை தாங்கிக்கொள்ள வலிமையில்லை,உடலும் மனமும் ஒருசேர தளர்ந்த நிலையில் “ஆமாம் ஆமாம்,பூமி சூரியனை சுற்ற வில்லை,சூரியன் தான் பூமியை சுற்றுகிறது” என்று உரக்க கத்தி மயங்கி கீழேவிழுந்தார்.மயக்க நிலையில் தனக்கு தானே மெதுவாக சொல்லிக்கொண்டாராம் “இல்லை இல்லை, பூமி தான் சூரியனை சுற்றுகிறது”. 

குறிப்பு: 350 ஆண்டுகளுக்கு பிறகு 1922 ல் அதே வாடிகன் கத்தோலிக்க சபையில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.வழக்கின் முடிவில் போப் ஜான் பால் II சொன்ன தீர்ப்பு இதுதான்: ”கலிலியோ சொன்னது தான் சரி,அன்றைய தீர்ப்பு தவறானதாகும்,இதற்காக இந்த சபை வருத்தம் தெரிவிக்கிறது”

    “அறிவியலின் வாழ்வுதனை சூது கவ்வும்,அறிவியல் மறுபடியும் வெல்லும்” 

--மணி மாணிக்கம்.


Tuesday, November 5, 2013

கல்லறைக்குள் உலகம்:THE MUMMY (THE END)



அகேநேடனை கி.மு 1334 ம் ஆண்டு திடீரென மரணம் தழுவியது,இவர் இறந்ததற்கான காரணம் சரியாக தெரியவில்லை.இதனால் இவரின் வாரிசு டூத்தாங்மென் அடுத்த அரசராக அரியணை ஏறினார்.அப்போது வயது ஒன்பது தான்.அரசர் இவர் தான் என்றாலும் இளவயது காரணமாக உண்மையான அதிகாரம் என்னவோ மெய்க்காப்பாளர் அய்(Ay) என்பவரிடமும்,டூட்டின் பெரியம்மா நெபர்டிடியிடமும்(Nefertiti)(அப்பா அகேநேடனின் முதல் மனைவி) தான் இருந்தது.ஷோகேசில் இருக்கும் பொம்மை போலதான் டூட் அரியணையை அலங்கரித்தார்.அரசரான சில மாதங்களில் திருமண வைபவம் நடந்தேறியது.
மனைவியுடன் டூட்
மணமகள் யாருமில்லை தன் சகோதரியே தான்,பெயர் அங்கேசெநமன்(Ankhesenamun).டூட்டின் அப்பாவும் அம்மாவும் கூட உடன்பிறந்த அண்ணன்-தங்கையாக இருந்து மணமக்களாக ஆனவர்கள் தான்.இந்த கலாச்சார வழக்கம் நமக்கு வேண்டுமானால் விநோதமாகவும்,சங்கடமாகவும் இருக்கலாம்.ஆனால் அக்கால எகிப்திய நம்பிக்கையின்படி அரசபரம்பரை கடவுளின் புனித ரத்தத்தில் உருவானது என்றும்,இதனால் குடும்பத்தை தாண்டி வேறு உறவுகளில் திருமணம் செய்தால் அந்த புனிதம் கெட்டுவிடும் என்றும் எண்ணியே தன் சகோதர-சகோதரிகளையே திருமணம் செய்து வந்துள்ளனர்.

என்னதான் அரசனாக இருந்தாலும்,திருமணம் ஆகியிருந்தாலும், டூட்டிடம் அந்த குழந்தைத்தனமும்,விளையாட்டுதனமும் அவரை விட்டு போகவில்லை.செநெட் எனப்படும் ஒரு வகை விளையாட்டை அவர் விரும்பி விளையாடுவாராம்.ஒரு கையில் வில்லும் மறு கையில் செனட் போர்டும்(செனெட் என்பது நம்ம ஊர் பல்லாங்குழி மாதிரி) அவரிடம் எப்போதும் இருக்கும்.இவ்வளவு ஏன் சில நேரங்களில் அரியணையில் இருக்கும்போதே மந்திகளுடன் விளையாட ஆரம்பித்து விடுவாராம்.அதற்காக இவரை இம்சை அரசன் புலிகேசி லிஸ்டிலும் சேர்த்துவிட முடியாது.
போர்களத்தில் டுத்தாங்கமென்
இவரது காலத்தில் அப்பா செய்த மதம் ரீதியான தவறுகளை சரிசெய்து மீண்டும் சூரியகடவுளின் கோவிலையும் கட்டிகொடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்றார்.நூபியன்களுக்கு(பக்கத்து தேசம்) எதிராக யுத்தம் செய்து வெற்றிபெற்றார்.வணிகத்தை பெருக்குவதர்க்கு தேவையான புதிய தரைவழித் தடங்களை ஏற்படுத்தினார்.எல்லாவற்றிற்கும் மேலாக தலைநகரத்தை மெம்பிஸ்க்கு(Memphis) மாற்றினார்(இவரது அப்பா அரசராய் இருந்தபோது காலம் காலமாக தலைநகரமாக இருந்த மெம்பிஸை அழித்து,அமர்நா என்ற புதிய தலைநகரை ஏற்படுத்தினார்,இந்த செயல் மக்களிடம் வெறுப்பை அதிகரித்தன).எதிர்காலத்தில் உலகம் போற்றும் மன்னராய் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட டுத்தாங்கமென் கி.மு 1325ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார்.இவர் இறந்ததற்கான காரணம் சரிவர தெரியவில்லை. 2010ல் நடந்த DNA ஆய்வின் முடிவில் மலேரியாவால் இறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
மேலும் இவரது காலில் எலும்பு முறிவும்,தலையில் அடிபட்டதற்கான அடையாளங்களும் இருப்பதால் டூட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கின்றனர்.ஒருவேளை அப்படி இவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும்.?டூட்டின் மனைவியான அங்கேசெநமனுக்கும்,அவரது மெய்க்காப்பாளர் அய்க்கும்(AY) இடையே கள்ளகாதல் இருந்ததாகவும்,இதற்கு தொல்லையாக டூட் இருந்ததால் கொலைசெய்யபட்டார் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.எது எப்படியோ டுத்தாங்கமேன் இறந்தபிறகு அங்கேசெநமனுக்கும் அய்க்கும் சீரும்சிறப்புமாக திருமணம் நடந்தது.இதன்பிறகு இந்த இருவரை பற்றியும் எந்த ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை.        

டுத்தாங்கமென் கால வரலாற்றில் எத்தனையோ புகழ் பெற்ற மன்னர்கள் இருந்தாலும்,இவரை பற்றி மட்டும் குறிப்பிட்டு சொல்லக்காரணம்,மண்ணில் தோண்டியெடுத்த மம்மிகள் அனைத்தும் சிதைந்து போயும்,திருடர்களால் அழிக்கப்பட்டும்தான் கிடைத்தன.ஆனால் டுத்தாங்கமெனின் கல்லறை மட்டும் தான் பொக்கிஷங்களுடன் முழுதாக கண்டெடுக்கப்பட்டது.இவர் வாழ்ந்தது 19 ஆண்டுகள் தான் என்றாலும் 3300 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்தின் பழம்பெருமை,கலாச்சாரம்,நாகரீகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றை இன்று நாம் தெளிவாக தெரிந்துகொள்ள ஒரு நூலகம் போல் உதவியது இவரது கல்லறை என கூறலாம்.லண்டன் மியூசியத்தில் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இன்றும் கதைசொல்லிகொண்டிருக்கிறார் இந்த மரியான் டுத்தாங்கமென்.

இத்துடன் கல்லறைக்குள் உலகம்:THE MUMMYமுடிவடைகிறது,நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்திருக்குமென நம்புகிறேன்.இத்தொடரை தொடர்ந்து படித்துவந்தும்,நிறைகுறைகளை கூறியும்,பாராட்டி ஊக்கபடுத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

எழுத்து : மணி மாணிக்கம்







Sunday, November 3, 2013

Do not disturb my circles

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்..
நீ என்னை நீங்கிச் சென்றாலே...
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்..
நீ எந்தன் பக்கம் நின்றாலே...
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி...

இதையெல்லாம் எழுதுனது நம்மூரு கவிஞர்கள் வாலியோ, வைரமுத்தோ இல்லைங்க.. பின்ன சேக்ஸ்பியர்ரானு கேட்கிறீங்களா ? அவரும் இல்ல..! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...!!

நேரம்கிறது ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம் மாறுபடும்கிறதையும், காலம்னு தனியே ஒன்று கிடையாது என்கிற அவருடைய சார்பியல் தத்துவத்தையும் (Relativity Theory) எளிமையா புரியவைக்க 1905ல ஐன்ஸ்டீன் சொன்னதுதான் மேலே சொன்ன கவி வரிகள்..!

ஆச்சிர்யமா இருக்குல்ல. அறிவியல் மட்டும் ஆச்சிர்யம் இல்லைங்க, சில அறிவியல் அறிஞர்கள் வாழ்க்கையும் ஆச்சிர்யம்தான். அப்படி ஒரு ஆச்சிர்யமான ஆளுதான் இன்னைக்கு நாம பார்க்கப்போற கிரேக்க மேதை, தனிமனித ராணுவம் "ஆர்க்கிமிடீஸ்". "யுரேகா..!" இவர அறிமுகப்படுத்த இந்த ஒரு வார்த்தை போதும். ஒரு பரபரப்பான திரைக்கதைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டது ஆர்க்கிமிடீஸ்ன் வாழ்க்கை.

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் சைராக்கஸ் என்ற துறைமுக நகரை (இன்றைய இத்தாலிய நகரம்) அரசர் இரண்டாம் ஹியரோ சீரும் சிறப்பும்மாக ஆட்சி செய்து வந்தார். அக்பர் - பீர்பால், கிருஷ்ணதேவராயர் - தெனாலிராமன் மாதிரி ஹியரோ ராஜாக்கு ஆர்க்கிமிடீஸ் சிறந்த ஆலோசகரா திகழ்ந்தார். ஒருநாள் அரசர் ஒரு தங்கக்கட்டியை அரண்மனை கொல்லனிடம் கொடுத்து அழகான கிரீடம் செய்து தருமாறு கேட்டார். சில நாட்களுக்குப் பிறகு வேலையை முடித்த அரண்மனை கொல்லனும் புதிய கிரீடத்தை அரசரிடம் சமர்பித்தார். அரசருக்கு புதிய கிரீடத்தின் அழகு நிறைவை தந்தாலும் அதன் வண்ணம் தங்கம் போல் அல்லாது இருப்பது கண்டார். கொல்லனை விசாரித்ததில் அரசர் கொடுத்த தங்கக்கட்டியின் எடையும், கிரீடத்தின் எடையும் சமமாகத்தானே உள்ளது என்று கூறி சமாளித்தார். இப்போது அரசருக்கு இருப்பது ரெண்டே வழி. ஒன்று கிரீடத்தை உருக்கி தங்கத்தை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அளவை சரிபார்ப்பது அல்லது வழக்கை ஆர்க்கிமிடீஸ்ஸிடம் ஒப்படைப்பது. வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, கிரீடத்தை சிதைக்காமல் தங்கத்தின் எடையையும், தரத்தையும் சரிப்பார்க்குமாறு அரசர் ஆர்க்கிமிடீஸ்ஸிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலேயே தனது இரவையும் பகலையும் செலவிட்டார் ஆர்க்கிமிடீஸ். 'பார்த்த இடத்திலெல்லாம் உனைப்போல் பாவை தெரியுதடி' - பார்த்த இடத்திலெல்லாம் பாரதிக்கு பாவை தெரிந்தது போல ஆர்க்கிமிடீஸ்க்கு கிரீடப்பிரச்னை தெரிந்தது. நாட்கள் சென்றன. ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒருபகல்ப்பொழுதில் சோர்வுடன் நிரம்பியிருந்த குளியல்தொட்டியில் குளிப்பதற்க்காக இறங்கினார். நீர் வெளியே சிந்தத்தொடங்கியது. அந்த கணம், ஐசக் நியுட்டன் முன்னால் ஆப்பிள் விழுந்த அந்த கணம். ஆம், அந்த கணப்பொழுதில்தான் "ஆர்க்கிமிடீஸ் தத்துவம்" என்று பரவலாக அறியப்படும் பத்து மதிப்பெண் கேள்வியும் அதற்க்கான பதிலும் பிறந்தது.

"திரவத்தில் அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அத்திரவம் செலுத்தும் மிதப்பு விசை அப்பொருளினால் இடப்பெயர்க்கப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்"

-ஆர்க்கிமிடீஸ்ன் மூளையில் இது உதித்த அந்த கணம் மனிதர் யோகநிலையை அடைந்து குளியல்தொட்டியில் இருந்து குதித்து ஆனந்தமாக "யுரேகா..யுரேகா..!" (கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்..)என்று கத்தியப்படி ஆடையில்லாமல் தெருவில் இறங்கி அரண்மனையை நோக்கி ஓட ஆரம்பித்தார்..!



கிரீடத்தில் தங்கத்தின் எடை குறைவாக இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு வெள்ளி கலந்தது உறுதிசெய்யப்பட்டது. கொல்லனும் உண்மையை ஒப்புக்கொண்டு சிறைக்கு அனுப்பப்பட்டான்.

பின்பு நெம்புகோலின் தத்துவத்தையும் கண்டறிந்தார். அவருக்கு முன்பே அனுபவரீதியாக பலர் நெம்புகோலை உபயோகித்து வந்தாலும், அதை சரியாக இயக்கும் முறையை கணித சமன்பாடுகளில் நிறுவி உலகுக்கு தெரிவித்தார்.

"நிற்பதற்கு ஓர் இடம் கொப்பீர்களானால் இந்தப் பூமியையே அசைத்துக் காட்டுகிறேன்" என்று சவால் விடுத்தார் அந்த மேதை.



இவ்வாறாக அவருடைய புகழ் நாலாபக்கமும் பரவ தொடங்கிய நேரம், சைராக்கஸ் நகரின் மீது ரோமானிய பேரரசு தளபதி மார்செல் தலைமையில் கடல்மார்க்கமாக படையெடுத்து வந்தது. இதை அறிந்த சைராக்கஸ் அரசர் இரண்டாம் ஹியரோ தலைமறைவானார்.நகரை காப்பாற்றும் பொறுப்பு ஆர்க்கிமிடீஸ்ஸிடம் வந்தது. தன்னுடைய அறிவியல் அறிவு, அந்நகரின் வலுவான கோட்டை, சொற்ப படைவீரர்கள் இதுதான் ஆர்க்கிமிடீஸ்ஸின் அப்போதைய நிலைமை.

வரலாறு எத்தனையோ கொடூரமான போர்களையும், முற்றுகைகளையும் சந்தித்துள்ளது. ஆனால் ஒரு பேரரசின் போர்க்கப்பல்களுக்கு எதிராக ஒரு தனி மனிதனின் அறிவியல் அறிவு நிறுத்திவைக்கப்பட்டது இப்போர்க்களத்தில் மட்டுமே.

போர்க்கப்பல்கள் நகரை நெருங்குவதை அறிந்த ஆர்க்கிமிடீஸ் நகரின் கோட்டை கதவுகளை அடைக்குமாறு ஆணையிட்டார். சில முன்னேற்பாடுகளை செய்தார். எதிரி அருகில் வரும்வரை காத்திருந்தார். கப்பல்கள் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டன. தளபதி மார்செல் படை வீரர்களை கரையில் இறங்கி கோட்டை கதவுகளை உடைக்குமாறு ஆணையிட்டார். கதவுகளை உடைக்கும் ஏற்பாடுகளுடன் வீரர்களும் கோட்டையை நெருங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணிலிருந்து விண்கற்கள் சீறிப்பாய்ந்து வந்து வீரர்களை நசுக்க தொடங்கியது. இடைவிடாத விண்கற்களின் மழை. எதிர்பாராததும், முன்னெப்போதும் கேள்விப்பட்ராததுமான இவ்வகை தாக்குதலை சமாளிக்க முடியாமல் வீரர்கள் சிதறி ஓடினார்கள். தப்பிப்பிழைத்தவர்கள் மீண்டும் கப்பலில் தஞ்சமடைந்தார்கள். விழுந்த கற்களின் ஒன்றைக்கூட அசைக்க முடியாதது கண்டு தளபதி மார்செல் திகைத்தார். அவருக்கு ஆர்க்கிமிடீஸ்ன் நெம்புகோலின் தத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீரர்கள் தரையில் கால்வைக்க வேண்டியது, விண்கற்களின் மழை, திரும்பி ஓட்டம் இப்படியே சில நாட்கள் முற்றுகைலேயே சென்றது.



ரோமானிய வீரர்களுக்கு கப்பலிலும் நிம்மதியில்லை. ஓர் இரவு கோட்டையிலிருந்து ராட்ஷச கை போன்ற அமைப்பு நீண்டு வந்து கப்பலை அந்திரத்தில் அப்படியே தூக்கி கடலில் அமுத்தியது. வீரர்கள் இதனை பில்லி, சூனிய, மந்திர வேலைகள் என்றே நம்பி பயந்தனர். அவர்களுக்கு ஆர்க்கிமிடீஸ்ன் கிரேன் போன்ற அமைப்புகள் தெரிந்திருக்க நியாயம்மில்லை. தொடர்ந்து வந்த இரவுகளில் மேலும் பல கப்பல்கள் கடலில் மூழ்கின. தளபதி மார்செல்ன் கட்டளைக்கிணங்க இரவிலும் தூங்காமல் வீரர்கள் காவலில் இருந்து முற்றுகையை தொடர்ந்தனர்.



தொடர்ந்து வந்த ஒரு நாளில் வழக்கம்போல் பொழுது புலர்ந்து சூரியன் உதிக்க தொடங்கியது. சூழ்ந்திருந்த கப்பல்களில் ஒரு கப்பலில் மட்டும் சூரிய வெப்பம் அதிகமாக இருப்பது போல் உணர்ந்தனர். சிறிது நேரத்தில் அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இது நிச்சயம் ஏவப்பட்ட சூனியக்காரியின் வேலைதான் என்று உறுதியாக நம்ப தொடங்கினர் ரோமானிய வீரர்கள். ஆர்க்கிமிடீஸ் பெரிய பெரிய கண்ணாடிகளை உபயோகித்து சூரிய ஒளியை குவித்து கப்பலின் மேல் விழ செய்தார். கப்பலின் அடித்தளத்தில் தார் பூசப்பட்ட அந்த கால பாய்மர கப்பல்கள் எளிதில் தீக்கு இரையாகின.


இப்படியே ரோமானிய படையின் பெரும் பகுதியை அழித்தார் ஆர்க்கிமிடீஸ். மூன்று ஆண்டுகள் முற்றுகையிலேயே கழிந்தது.

பொறுமை இழந்த தளபதி மார்செல், "பொறுத்தது போதும்.. தாக்குதலை ஆரம்பியுங்கள்.. உயிர் பிழைத்தவர்கள் கோட்டை கதவுகளை உடைத்தெரியுங்கள்" என்று ஆணையிட்டார். பல இழப்புகளுக்குப் பிறகு சைராக்கஸ் நகர் ரோமானியர்கள் வசம் ஆனது. நகருக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக தளபதி மார்செல், ஆர்க்கிமிடீஸ் பற்றி கேள்விப்பட்டு அவரை உயிருடன் பிடித்து வருமாறு ஒரு படை வீரனை அனுப்பினார். படை வீரன் வந்து ஆர்க்கிமிடீஸ்ஸிடம் விசயத்தை சொல்லி வருமாறு அழைத்தான். அவர் அப்போது தரையில் பலவிதமான வரைபடங்களை வட்டம், கோளம் என வரைந்து கணித சமன்பாடுகளாக நிறுவிக்கொண்டு இருந்தார். ஆதலால், "இல்லை.. என்னால் இப்போது வரமுடியாது.. நான் இந்த சமன்பாடுகளை முடித்து தீர்வு காண வேண்டும். So..Do not disturb my circles!" என்றார். கோபமடைந்த படை வீரன் தன் வாளால் ஆர்க்கிமிடீஸ்ன் தலையை கொய்து தளபதி மார்செல்லிடம் கொடுத்தான்.



அறிஞர்கள் அதிகாரத்தின் முன்பு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதனை வரலாற்று சாட்சியாக ஆர்க்கிமிடீஸ்ன் ரத்தம் பதிவு செய்தது.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...

-உங்கள் பாலா-