Sunday, December 15, 2013

சூது கவ்வும்

மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் என்றுமே ஏழாம் பொருத்தம்தான்,மதம் சொல்வதை விஞ்ஞானம் நம்பாது,விஞ்ஞானம் சொல்வதை மதம் ஏற்காது.பகுத்தறிவு வளர்ச்சியடைந்த(ஓரளவிற்கு) இந்த காலத்திலேயே இப்படி என்றால் 370 வருஷத்திற்கு முன்னால் சொல்லவாவேண்டும்.அப்படி உண்மையாக இருந்தும்கூட மத ஆதிக்கத்தின் முன் அறிவியல் மண்டியிட்ட ஒரு சம்பவத்தை தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம்.

கலிலியோ...நவீனவானியல் ஆய்வுகளின் தந்தை...இத்தாலியில் பிறந்த இயற்பியலாளர், வானியல்வல்லுநர், தத்துவஞானி.வானியல் துறையில் பல புரட்சிகள் செய்தவர்.அறிவியல் அறிஞர் கோபர்நிக்கஸ் கூறிய “சூரியனே மையபுள்ளி,அதை சுற்றியே மற்ற கோள்கள் இயங்குகின்றது” என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டு கலிலியோ எழுதிய புத்தகம் தான் “Dialogue Concerning the Two Chief World Systems”.இந்த புத்தகத்தில் “சூரியன் பூமியை சுற்றவில்லை,பூமியும் பிற கோள்களும் தான் சூரியனை மையமாக வைத்து சுற்றி வருகின்ற” என்று பல விளக்கங்களுடன் விவரித்திருந்தார்.விவகாரம் இங்கு தான் ஆரம்பித்தது.அப்போதைய கத்தோலிக்க கிறுத்துவ சபை இதை ஏற்கவில்லை,மேலும் இப்படி சொல்வது மத புனிதத்தை கெடுக்கும் செயல் என்றும்,மத குற்றம் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இதனால் கலிலியோ இத்தாலியிலிருந்து வாடிகன் நகருக்கு அழைத்துவரப்பட்டார்.1633 ம் ஆண்டு ஜூன் மாதம் கத்தோலிக்க கிறித்துவ சபையில் வழக்கு நடந்தது.அப்போதைய போப் அர்பன் VIII ன் முன்னால் கலிலியோ நிறுத்தப்பட்டார்.கலிலியோ தன் தரப்பு நியாங்களையும் அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் எவ்வளவோ எடுத்துக்கூறினார்.ஹுஹும்,பலன் இல்லை.இறுதில் தீர்ப்பு கலிலியோவிற்கு எதிராகவே அமைந்தது.

அதாவது மத புனிதத்தை அசுத்தப்படுத்தியதர்க்கும்,மக்கள் நம்பிக்கையை குலைக்க முயன்றதற்கும் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது.அதோட விட்டாங்களா,பூமி சூரியனை சுற்ற வில்லை,சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்று சபையில் உரக்க சொல்லவேண்டும்,அப்படி சொல்லும்வரை சவக்கடி தண்டை தந்தனர்.தண்டனை ஆரம்பிக்கப்பட்டது,ஒன்று,இரண்டு,மூன்று என்று சவுக்கடிகள்விழ ஆரம்பித்தது.

ஓர் அறிவியல் அறிஞருக்கு உலக உண்மையை எப்படி மாற்றி சொல்ல மனம் வரும்.சொல்லமாட்டேன் என்று மறுத்தார்.மேலும் மேலும் சவுக்கடிகள் விழ ஆரம்பித்தன,அந்த எழுபது வயது கலிலியோவால் இதற்கு மேல் அடிகளை தாங்கிக்கொள்ள வலிமையில்லை,உடலும் மனமும் ஒருசேர தளர்ந்த நிலையில் “ஆமாம் ஆமாம்,பூமி சூரியனை சுற்ற வில்லை,சூரியன் தான் பூமியை சுற்றுகிறது” என்று உரக்க கத்தி மயங்கி கீழேவிழுந்தார்.மயக்க நிலையில் தனக்கு தானே மெதுவாக சொல்லிக்கொண்டாராம் “இல்லை இல்லை, பூமி தான் சூரியனை சுற்றுகிறது”. 

குறிப்பு: 350 ஆண்டுகளுக்கு பிறகு 1922 ல் அதே வாடிகன் கத்தோலிக்க சபையில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.வழக்கின் முடிவில் போப் ஜான் பால் II சொன்ன தீர்ப்பு இதுதான்: ”கலிலியோ சொன்னது தான் சரி,அன்றைய தீர்ப்பு தவறானதாகும்,இதற்காக இந்த சபை வருத்தம் தெரிவிக்கிறது”

    “அறிவியலின் வாழ்வுதனை சூது கவ்வும்,அறிவியல் மறுபடியும் வெல்லும்” 

--மணி மாணிக்கம்.


Tuesday, November 5, 2013

கல்லறைக்குள் உலகம்:THE MUMMY (THE END)



அகேநேடனை கி.மு 1334 ம் ஆண்டு திடீரென மரணம் தழுவியது,இவர் இறந்ததற்கான காரணம் சரியாக தெரியவில்லை.இதனால் இவரின் வாரிசு டூத்தாங்மென் அடுத்த அரசராக அரியணை ஏறினார்.அப்போது வயது ஒன்பது தான்.அரசர் இவர் தான் என்றாலும் இளவயது காரணமாக உண்மையான அதிகாரம் என்னவோ மெய்க்காப்பாளர் அய்(Ay) என்பவரிடமும்,டூட்டின் பெரியம்மா நெபர்டிடியிடமும்(Nefertiti)(அப்பா அகேநேடனின் முதல் மனைவி) தான் இருந்தது.ஷோகேசில் இருக்கும் பொம்மை போலதான் டூட் அரியணையை அலங்கரித்தார்.அரசரான சில மாதங்களில் திருமண வைபவம் நடந்தேறியது.
மனைவியுடன் டூட்
மணமகள் யாருமில்லை தன் சகோதரியே தான்,பெயர் அங்கேசெநமன்(Ankhesenamun).டூட்டின் அப்பாவும் அம்மாவும் கூட உடன்பிறந்த அண்ணன்-தங்கையாக இருந்து மணமக்களாக ஆனவர்கள் தான்.இந்த கலாச்சார வழக்கம் நமக்கு வேண்டுமானால் விநோதமாகவும்,சங்கடமாகவும் இருக்கலாம்.ஆனால் அக்கால எகிப்திய நம்பிக்கையின்படி அரசபரம்பரை கடவுளின் புனித ரத்தத்தில் உருவானது என்றும்,இதனால் குடும்பத்தை தாண்டி வேறு உறவுகளில் திருமணம் செய்தால் அந்த புனிதம் கெட்டுவிடும் என்றும் எண்ணியே தன் சகோதர-சகோதரிகளையே திருமணம் செய்து வந்துள்ளனர்.

என்னதான் அரசனாக இருந்தாலும்,திருமணம் ஆகியிருந்தாலும், டூட்டிடம் அந்த குழந்தைத்தனமும்,விளையாட்டுதனமும் அவரை விட்டு போகவில்லை.செநெட் எனப்படும் ஒரு வகை விளையாட்டை அவர் விரும்பி விளையாடுவாராம்.ஒரு கையில் வில்லும் மறு கையில் செனட் போர்டும்(செனெட் என்பது நம்ம ஊர் பல்லாங்குழி மாதிரி) அவரிடம் எப்போதும் இருக்கும்.இவ்வளவு ஏன் சில நேரங்களில் அரியணையில் இருக்கும்போதே மந்திகளுடன் விளையாட ஆரம்பித்து விடுவாராம்.அதற்காக இவரை இம்சை அரசன் புலிகேசி லிஸ்டிலும் சேர்த்துவிட முடியாது.
போர்களத்தில் டுத்தாங்கமென்
இவரது காலத்தில் அப்பா செய்த மதம் ரீதியான தவறுகளை சரிசெய்து மீண்டும் சூரியகடவுளின் கோவிலையும் கட்டிகொடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்றார்.நூபியன்களுக்கு(பக்கத்து தேசம்) எதிராக யுத்தம் செய்து வெற்றிபெற்றார்.வணிகத்தை பெருக்குவதர்க்கு தேவையான புதிய தரைவழித் தடங்களை ஏற்படுத்தினார்.எல்லாவற்றிற்கும் மேலாக தலைநகரத்தை மெம்பிஸ்க்கு(Memphis) மாற்றினார்(இவரது அப்பா அரசராய் இருந்தபோது காலம் காலமாக தலைநகரமாக இருந்த மெம்பிஸை அழித்து,அமர்நா என்ற புதிய தலைநகரை ஏற்படுத்தினார்,இந்த செயல் மக்களிடம் வெறுப்பை அதிகரித்தன).எதிர்காலத்தில் உலகம் போற்றும் மன்னராய் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட டுத்தாங்கமென் கி.மு 1325ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார்.இவர் இறந்ததற்கான காரணம் சரிவர தெரியவில்லை. 2010ல் நடந்த DNA ஆய்வின் முடிவில் மலேரியாவால் இறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
மேலும் இவரது காலில் எலும்பு முறிவும்,தலையில் அடிபட்டதற்கான அடையாளங்களும் இருப்பதால் டூட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கின்றனர்.ஒருவேளை அப்படி இவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான காரணம் என்னவாக இருக்கும்.?டூட்டின் மனைவியான அங்கேசெநமனுக்கும்,அவரது மெய்க்காப்பாளர் அய்க்கும்(AY) இடையே கள்ளகாதல் இருந்ததாகவும்,இதற்கு தொல்லையாக டூட் இருந்ததால் கொலைசெய்யபட்டார் என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.எது எப்படியோ டுத்தாங்கமேன் இறந்தபிறகு அங்கேசெநமனுக்கும் அய்க்கும் சீரும்சிறப்புமாக திருமணம் நடந்தது.இதன்பிறகு இந்த இருவரை பற்றியும் எந்த ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை.        

டுத்தாங்கமென் கால வரலாற்றில் எத்தனையோ புகழ் பெற்ற மன்னர்கள் இருந்தாலும்,இவரை பற்றி மட்டும் குறிப்பிட்டு சொல்லக்காரணம்,மண்ணில் தோண்டியெடுத்த மம்மிகள் அனைத்தும் சிதைந்து போயும்,திருடர்களால் அழிக்கப்பட்டும்தான் கிடைத்தன.ஆனால் டுத்தாங்கமெனின் கல்லறை மட்டும் தான் பொக்கிஷங்களுடன் முழுதாக கண்டெடுக்கப்பட்டது.இவர் வாழ்ந்தது 19 ஆண்டுகள் தான் என்றாலும் 3300 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்தின் பழம்பெருமை,கலாச்சாரம்,நாகரீகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றை இன்று நாம் தெளிவாக தெரிந்துகொள்ள ஒரு நூலகம் போல் உதவியது இவரது கல்லறை என கூறலாம்.லண்டன் மியூசியத்தில் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இன்றும் கதைசொல்லிகொண்டிருக்கிறார் இந்த மரியான் டுத்தாங்கமென்.

இத்துடன் கல்லறைக்குள் உலகம்:THE MUMMYமுடிவடைகிறது,நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்திருக்குமென நம்புகிறேன்.இத்தொடரை தொடர்ந்து படித்துவந்தும்,நிறைகுறைகளை கூறியும்,பாராட்டி ஊக்கபடுத்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

எழுத்து : மணி மாணிக்கம்







Sunday, November 3, 2013

Do not disturb my circles

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்..
நீ என்னை நீங்கிச் சென்றாலே...
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்..
நீ எந்தன் பக்கம் நின்றாலே...
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி...

இதையெல்லாம் எழுதுனது நம்மூரு கவிஞர்கள் வாலியோ, வைரமுத்தோ இல்லைங்க.. பின்ன சேக்ஸ்பியர்ரானு கேட்கிறீங்களா ? அவரும் இல்ல..! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...!!

நேரம்கிறது ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம் மாறுபடும்கிறதையும், காலம்னு தனியே ஒன்று கிடையாது என்கிற அவருடைய சார்பியல் தத்துவத்தையும் (Relativity Theory) எளிமையா புரியவைக்க 1905ல ஐன்ஸ்டீன் சொன்னதுதான் மேலே சொன்ன கவி வரிகள்..!

ஆச்சிர்யமா இருக்குல்ல. அறிவியல் மட்டும் ஆச்சிர்யம் இல்லைங்க, சில அறிவியல் அறிஞர்கள் வாழ்க்கையும் ஆச்சிர்யம்தான். அப்படி ஒரு ஆச்சிர்யமான ஆளுதான் இன்னைக்கு நாம பார்க்கப்போற கிரேக்க மேதை, தனிமனித ராணுவம் "ஆர்க்கிமிடீஸ்". "யுரேகா..!" இவர அறிமுகப்படுத்த இந்த ஒரு வார்த்தை போதும். ஒரு பரபரப்பான திரைக்கதைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டது ஆர்க்கிமிடீஸ்ன் வாழ்க்கை.

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் சைராக்கஸ் என்ற துறைமுக நகரை (இன்றைய இத்தாலிய நகரம்) அரசர் இரண்டாம் ஹியரோ சீரும் சிறப்பும்மாக ஆட்சி செய்து வந்தார். அக்பர் - பீர்பால், கிருஷ்ணதேவராயர் - தெனாலிராமன் மாதிரி ஹியரோ ராஜாக்கு ஆர்க்கிமிடீஸ் சிறந்த ஆலோசகரா திகழ்ந்தார். ஒருநாள் அரசர் ஒரு தங்கக்கட்டியை அரண்மனை கொல்லனிடம் கொடுத்து அழகான கிரீடம் செய்து தருமாறு கேட்டார். சில நாட்களுக்குப் பிறகு வேலையை முடித்த அரண்மனை கொல்லனும் புதிய கிரீடத்தை அரசரிடம் சமர்பித்தார். அரசருக்கு புதிய கிரீடத்தின் அழகு நிறைவை தந்தாலும் அதன் வண்ணம் தங்கம் போல் அல்லாது இருப்பது கண்டார். கொல்லனை விசாரித்ததில் அரசர் கொடுத்த தங்கக்கட்டியின் எடையும், கிரீடத்தின் எடையும் சமமாகத்தானே உள்ளது என்று கூறி சமாளித்தார். இப்போது அரசருக்கு இருப்பது ரெண்டே வழி. ஒன்று கிரீடத்தை உருக்கி தங்கத்தை மட்டும் தனியாக பிரித்தெடுத்து அளவை சரிபார்ப்பது அல்லது வழக்கை ஆர்க்கிமிடீஸ்ஸிடம் ஒப்படைப்பது. வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு, கிரீடத்தை சிதைக்காமல் தங்கத்தின் எடையையும், தரத்தையும் சரிப்பார்க்குமாறு அரசர் ஆர்க்கிமிடீஸ்ஸிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலேயே தனது இரவையும் பகலையும் செலவிட்டார் ஆர்க்கிமிடீஸ். 'பார்த்த இடத்திலெல்லாம் உனைப்போல் பாவை தெரியுதடி' - பார்த்த இடத்திலெல்லாம் பாரதிக்கு பாவை தெரிந்தது போல ஆர்க்கிமிடீஸ்க்கு கிரீடப்பிரச்னை தெரிந்தது. நாட்கள் சென்றன. ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒருபகல்ப்பொழுதில் சோர்வுடன் நிரம்பியிருந்த குளியல்தொட்டியில் குளிப்பதற்க்காக இறங்கினார். நீர் வெளியே சிந்தத்தொடங்கியது. அந்த கணம், ஐசக் நியுட்டன் முன்னால் ஆப்பிள் விழுந்த அந்த கணம். ஆம், அந்த கணப்பொழுதில்தான் "ஆர்க்கிமிடீஸ் தத்துவம்" என்று பரவலாக அறியப்படும் பத்து மதிப்பெண் கேள்வியும் அதற்க்கான பதிலும் பிறந்தது.

"திரவத்தில் அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அத்திரவம் செலுத்தும் மிதப்பு விசை அப்பொருளினால் இடப்பெயர்க்கப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமம்"

-ஆர்க்கிமிடீஸ்ன் மூளையில் இது உதித்த அந்த கணம் மனிதர் யோகநிலையை அடைந்து குளியல்தொட்டியில் இருந்து குதித்து ஆனந்தமாக "யுரேகா..யுரேகா..!" (கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன்..)என்று கத்தியப்படி ஆடையில்லாமல் தெருவில் இறங்கி அரண்மனையை நோக்கி ஓட ஆரம்பித்தார்..!



கிரீடத்தில் தங்கத்தின் எடை குறைவாக இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு வெள்ளி கலந்தது உறுதிசெய்யப்பட்டது. கொல்லனும் உண்மையை ஒப்புக்கொண்டு சிறைக்கு அனுப்பப்பட்டான்.

பின்பு நெம்புகோலின் தத்துவத்தையும் கண்டறிந்தார். அவருக்கு முன்பே அனுபவரீதியாக பலர் நெம்புகோலை உபயோகித்து வந்தாலும், அதை சரியாக இயக்கும் முறையை கணித சமன்பாடுகளில் நிறுவி உலகுக்கு தெரிவித்தார்.

"நிற்பதற்கு ஓர் இடம் கொப்பீர்களானால் இந்தப் பூமியையே அசைத்துக் காட்டுகிறேன்" என்று சவால் விடுத்தார் அந்த மேதை.



இவ்வாறாக அவருடைய புகழ் நாலாபக்கமும் பரவ தொடங்கிய நேரம், சைராக்கஸ் நகரின் மீது ரோமானிய பேரரசு தளபதி மார்செல் தலைமையில் கடல்மார்க்கமாக படையெடுத்து வந்தது. இதை அறிந்த சைராக்கஸ் அரசர் இரண்டாம் ஹியரோ தலைமறைவானார்.நகரை காப்பாற்றும் பொறுப்பு ஆர்க்கிமிடீஸ்ஸிடம் வந்தது. தன்னுடைய அறிவியல் அறிவு, அந்நகரின் வலுவான கோட்டை, சொற்ப படைவீரர்கள் இதுதான் ஆர்க்கிமிடீஸ்ஸின் அப்போதைய நிலைமை.

வரலாறு எத்தனையோ கொடூரமான போர்களையும், முற்றுகைகளையும் சந்தித்துள்ளது. ஆனால் ஒரு பேரரசின் போர்க்கப்பல்களுக்கு எதிராக ஒரு தனி மனிதனின் அறிவியல் அறிவு நிறுத்திவைக்கப்பட்டது இப்போர்க்களத்தில் மட்டுமே.

போர்க்கப்பல்கள் நகரை நெருங்குவதை அறிந்த ஆர்க்கிமிடீஸ் நகரின் கோட்டை கதவுகளை அடைக்குமாறு ஆணையிட்டார். சில முன்னேற்பாடுகளை செய்தார். எதிரி அருகில் வரும்வரை காத்திருந்தார். கப்பல்கள் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டன. தளபதி மார்செல் படை வீரர்களை கரையில் இறங்கி கோட்டை கதவுகளை உடைக்குமாறு ஆணையிட்டார். கதவுகளை உடைக்கும் ஏற்பாடுகளுடன் வீரர்களும் கோட்டையை நெருங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணிலிருந்து விண்கற்கள் சீறிப்பாய்ந்து வந்து வீரர்களை நசுக்க தொடங்கியது. இடைவிடாத விண்கற்களின் மழை. எதிர்பாராததும், முன்னெப்போதும் கேள்விப்பட்ராததுமான இவ்வகை தாக்குதலை சமாளிக்க முடியாமல் வீரர்கள் சிதறி ஓடினார்கள். தப்பிப்பிழைத்தவர்கள் மீண்டும் கப்பலில் தஞ்சமடைந்தார்கள். விழுந்த கற்களின் ஒன்றைக்கூட அசைக்க முடியாதது கண்டு தளபதி மார்செல் திகைத்தார். அவருக்கு ஆர்க்கிமிடீஸ்ன் நெம்புகோலின் தத்துவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீரர்கள் தரையில் கால்வைக்க வேண்டியது, விண்கற்களின் மழை, திரும்பி ஓட்டம் இப்படியே சில நாட்கள் முற்றுகைலேயே சென்றது.



ரோமானிய வீரர்களுக்கு கப்பலிலும் நிம்மதியில்லை. ஓர் இரவு கோட்டையிலிருந்து ராட்ஷச கை போன்ற அமைப்பு நீண்டு வந்து கப்பலை அந்திரத்தில் அப்படியே தூக்கி கடலில் அமுத்தியது. வீரர்கள் இதனை பில்லி, சூனிய, மந்திர வேலைகள் என்றே நம்பி பயந்தனர். அவர்களுக்கு ஆர்க்கிமிடீஸ்ன் கிரேன் போன்ற அமைப்புகள் தெரிந்திருக்க நியாயம்மில்லை. தொடர்ந்து வந்த இரவுகளில் மேலும் பல கப்பல்கள் கடலில் மூழ்கின. தளபதி மார்செல்ன் கட்டளைக்கிணங்க இரவிலும் தூங்காமல் வீரர்கள் காவலில் இருந்து முற்றுகையை தொடர்ந்தனர்.



தொடர்ந்து வந்த ஒரு நாளில் வழக்கம்போல் பொழுது புலர்ந்து சூரியன் உதிக்க தொடங்கியது. சூழ்ந்திருந்த கப்பல்களில் ஒரு கப்பலில் மட்டும் சூரிய வெப்பம் அதிகமாக இருப்பது போல் உணர்ந்தனர். சிறிது நேரத்தில் அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இது நிச்சயம் ஏவப்பட்ட சூனியக்காரியின் வேலைதான் என்று உறுதியாக நம்ப தொடங்கினர் ரோமானிய வீரர்கள். ஆர்க்கிமிடீஸ் பெரிய பெரிய கண்ணாடிகளை உபயோகித்து சூரிய ஒளியை குவித்து கப்பலின் மேல் விழ செய்தார். கப்பலின் அடித்தளத்தில் தார் பூசப்பட்ட அந்த கால பாய்மர கப்பல்கள் எளிதில் தீக்கு இரையாகின.


இப்படியே ரோமானிய படையின் பெரும் பகுதியை அழித்தார் ஆர்க்கிமிடீஸ். மூன்று ஆண்டுகள் முற்றுகையிலேயே கழிந்தது.

பொறுமை இழந்த தளபதி மார்செல், "பொறுத்தது போதும்.. தாக்குதலை ஆரம்பியுங்கள்.. உயிர் பிழைத்தவர்கள் கோட்டை கதவுகளை உடைத்தெரியுங்கள்" என்று ஆணையிட்டார். பல இழப்புகளுக்குப் பிறகு சைராக்கஸ் நகர் ரோமானியர்கள் வசம் ஆனது. நகருக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக தளபதி மார்செல், ஆர்க்கிமிடீஸ் பற்றி கேள்விப்பட்டு அவரை உயிருடன் பிடித்து வருமாறு ஒரு படை வீரனை அனுப்பினார். படை வீரன் வந்து ஆர்க்கிமிடீஸ்ஸிடம் விசயத்தை சொல்லி வருமாறு அழைத்தான். அவர் அப்போது தரையில் பலவிதமான வரைபடங்களை வட்டம், கோளம் என வரைந்து கணித சமன்பாடுகளாக நிறுவிக்கொண்டு இருந்தார். ஆதலால், "இல்லை.. என்னால் இப்போது வரமுடியாது.. நான் இந்த சமன்பாடுகளை முடித்து தீர்வு காண வேண்டும். So..Do not disturb my circles!" என்றார். கோபமடைந்த படை வீரன் தன் வாளால் ஆர்க்கிமிடீஸ்ன் தலையை கொய்து தளபதி மார்செல்லிடம் கொடுத்தான்.



அறிஞர்கள் அதிகாரத்தின் முன்பு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதனை வரலாற்று சாட்சியாக ஆர்க்கிமிடீஸ்ன் ரத்தம் பதிவு செய்தது.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...

-உங்கள் பாலா-


Wednesday, October 30, 2013

கல்லறைக்குள் உலகம்:THE MUMMY (Part 3)

மூன்றாவது தங்கக்கவசதினுள் மம்மியாக்கப்பட்ட டுத்தாங்கமென் வெளிப்பட்டார்.அவரது உடலை மூன்று அடுக்குகளான நீளமான துணியால்(பேன்டேஜ்) சுருட்டிவைக்கபட்டிருந்தது.மெதுவாக அந்த துணியை உடலிலிருந்து பிரித்தெடுக்க ஆரம்பித்தனர்.பிரிக்க பிரிக்க தங்க,வைர ஆபரணங்கள் வெளிப்பட்டு கொண்டிருந்ததை கண்டு தொல்லியல் நிபுணர்கள் மிரண்டுபோயினர்.2௦௦ கும் மேற்பட்ட நகைகள் டூட்டின் உடல் மீது இருந்ததாக கார்ட்டர் பின்னர் அறிவித்தார்.இந்த நகைகளை பிரித்தெடுக்கும் போதும்,பெட்டியிலிருந்து எடுக்கும் போதும் மன்னரின் உடல் பல இடங்களில் சேதமடைந்தது.எடுத்துக்காட்டுக்கு சொல்லவேண்டுமென்றால்,கையிலிருந்த ப்ரேஸ்லெட்டை எடுக்கும்போது அந்த கை துண்டானது,அதே போல் பல ஆண்டுகளானதால் உடல் நன்றாக பெட்டியுடன் ஒட்டியிருந்தது,கத்தியால் கிழித்து எடுக்கும்பொழுது முதுகு பகுதி பாதிக்கப்பட்டது.ஒருவழியாக அவரது உடலை வெளியே எடுத்து 33௦௦ ஆண்டுகளாக நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தவரை ஆராய்ச்சி என்ற பெயரில் குதற ஆரம்பித்தனர்.
டூட்டின் உடலுடன் கார்ட்டர்
ஆனால் பல அபூர்வதகவல்கள் இதன்மூலம் கிடைத்ததென்னவோ உண்மைதான்.வெளியே எடுக்கப்பட்ட டூட் 5.5 அடி உயரம் இருந்தார்,தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது,உறுதியான எலும்பும்,பற்களையும் வைத்து இவர் இளைஞராயிருக்கும் போதே இறந்திருக்கலாம் கணிக்கப்பட்டு,பிறகு பதினெட்டு அல்லது பத்தொன்பதாவது வயதில் இறந்ததாக உறுதிசெய்யப்பட்டது.கல்லறையில் கிடைத்த சுவடுகளை வைத்து மன்னரின் வரலாறு ஒருவாறாக அனுமானிக்கப்பட்டது.இவரின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் முன் Mummification எனப்படும் உடலை பதப்படுத்தும் முறையை அறிந்துகொள்வோம்.
மன்னரோ,பெரிய செல்வந்தரோ இறந்துவிட்டால் மறுஜென்மத்தில் அவர்களின் ஆன்மா இதே உடலோடு வாழ்வதற்கு,இறந்தவரின் உடலை கெடாமல் பதபடுத்தி பாதுகாக்கும் முறையை பின்பற்றி வந்துள்ளனர் அக்கால எகிப்தியர்கள்.இப்பணி கைதேர்ந்த மருத்துவர்களால் செய்யப்படும்.டூட் மன்னர் இறந்தபின் அவரை பதப்படுத்தும் பணி 70 நாட்கள் நடந்துள்ளது.
முதலில் அவரது உடலிலிருந்து நுரையீரல்(lungs),கல்லீரல்(liver),குடல் மற்றும் மூளை ஆகியவற்றை எடுக்கப்படும்.காரணம் இவை உடலினுள் இருந்தால் மொத்த உடலையும் கெட்டுப்போக செய்யும் வாய்ப்புகள் அதிகம்.இதில் விஷேசம் என்னவென்றால் மூளையை வெளியே எடுத்த விதம் தான்,ஏனெனில் டூட்டின் உடலை ஆராயும்போது தலையில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது,பின் எப்படி மூளையை எடுத்தார்கள்..?! கொக்கி போன்ற சிறிய கம்பியை மூக்கின் வழியாக நுழைத்து,மூளையை குழைத்து வெளியே எடுத்துள்ளனர்.ஆனால் இதயத்தை மட்டும் அப்படியே விட்டுவிட்டனர்.ஏனெனில் உடலின் மொத்த இயக்கம்,சிந்தனை,ஞாபகம் போன்றவை இதயத்தை சார்ந்தது என்று அவர்கள் நம்பினர்,இவையெல்லாம் இதயத்தின் செயல் அல்ல மூளையின் செயல் தான் என்று அவர்களின் மூளைக்கு எட்டவில்லை போலும்.வெளியே எடுத்த இந்த உறுப்புகளை எல்லாம்(மூளையை தவிர) பத்திரமாக ஒரு ஜாடியில் போட்டு மூடி வைக்கப்படும்.இதன் பிறகு உடலை,வேதிபொருளான நேட்ரான்(Natron) எனும் உப்பை தடவி நாற்பது நாட்கள் நன்றாக உலறவைத்துவிடுவார்கள்.


இதன் மூலம் உடல் பாக்டீரியாக்களால் பாதிக்கப்படாமல் இருக்கும்.நாற்பது நாட்களுக்கு பின் உடல் உலர்ந்த திராட்சை போல சுருங்கிவிடும்,பிறகு எண்ணையில் நனைத்த துணியால் உடம்பினுள் வைத்து திணிக்கப்படும்(சோளக்காட்டு பொம்மையில வைக்கோல் வைப்போமே அப்படி).பின் நீளமான துணியால் உடலை நன்றாக சுற்றி வைத்துவிடுவார்கள்.இதன்பின் உடலை சவப்பெட்டியில் வைத்து மன்னரின் முகம் பதித்த கவசதினால் உடல் மூடப்பட்டது.
டுத்தாங்கமெனின் வரலாறு:

கி.மு 1341 ம் ஆண்டு மன்னர் அகேநேடன்(Akhenaten)-கியா(Kiya) (இரண்டாவது மனைவி) தம்பதிக்கு டுத்தாங்கமென் பிறந்தார். டுத்தாங்கமெனின் இயற்பெயர் டுத்தாங்கேடன் ஆகும்(மன்னரான பின் இவர் தன் பெயரை டுத்தாங்கமென் என மாற்றி கொண்டார்,’ஆமென்’ என்பது சூரியகடவுளை குறிக்கும்).அவர் பிறந்தபோது எகிப்திற்கு அப்படியொன்றும் பொற்காலம் இல்லை.டூட்டின் தந்தை அகேநேடன் 18வது ராஜவம்சத்தின் 11ம் மன்னராக பொறுப்பேற்று ஆண்டுவந்தார்.மதம் சார்ந்த இவரது நடவடிக்கைகள் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தன.ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றி வந்த மத நம்பிக்கைகளை இவர் எதிர்த்தது மட்டுமின்றி குலதெய்வமான சூரிய கடவுளின் கோவிலையும் இடித்துவிட்டார்..மனிதர் இதோடு நின்றிருக்கலாம்.இனி நான் தான் கடவுள்,என்னை தான் அனைவரும் வணங்க வேண்டுமென ஆணையிட்டு  தனக்கு தானே ஒரு கோவிலையும் கட்டிக்கொண்டார்.இதனால் அகேநேடன் ‘மதத்தீவிரவாதி’ என்று மக்களால் அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்பாராமல் கிடைத்த அரியணை..மர்மமான முறையில் டூட் மரணம்..அடுத்த பதிவில் தொடரும்...
                   **எழுத்து: மணி மாணிக்கம்** 




Tuesday, October 22, 2013

கல்லறைக்குள் உலகம்:THE MUMMY (Part 2)

கல்லறைக்குள் உலகம்: THE MUMMY (Part-1)-ன் தொடர்ச்சி
இரண்டாவது கதவை கண்டுபிடித்ததும் கார்ட்டருக்கு தனது இத்தனை ஆண்டு முயற்சி நிச்சயம் வெற்றிபெற்று விடும் என்று தோன்றியது..சிறிது நேரத்தில் சிறிய துளை ஒன்றை கதவில் ஏற்படுத்தினார்.சூடான காற்று அவர் முகத்தில் உள்ளிருந்து வீசியது.பிறகு அந்த கதவை திறந்து உள்ளே நுழைந்த கார்ட்டரின் கண்கள் அகல விரிந்தன.இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரம் தேவைபட்டது.ஒரு மியூசியமே வைக்கும் அளவிற்கு அந்த அறை பொக்கிஷங்களால் நிரப்பபட்டிருந்தது.தங்கம் மற்றும் யானை தந்ததால் செய்யபட்ட கிரிடம்,ஆசனம்,தங்க முலாம் பூசப்பட்ட ரதம்,மன்னரின் இரண்டு சிலைகள் என பல பொருட்கள் அந்த அறையில் இருந்தன.

ஆனால் கார்ட்டர் எதிர்பார்த்த டூட் மன்னரின் உடலை மட்டும் காணவில்லை (டுத்தாங்கமெனை வரலாற்று ஆசிரியர்கள் ‘’டூட்’’ என செல்லமாக அழைக்கின்றனர்,நாமும் இனி அப்படியே அழைப்போம்).
Tut's golden Throne and Ivory Perfume Tin
அந்த அறை முழுவதும் கார்ட்டரும் அவரது உதவியாளர்களும் தேடி பார்த்தும் டூட் மன்னரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை,இதனால் அனைவருக்கும் பெரும் ஏமாற்றம்.இதற்கிடையில் ஓர் துர்சம்பவம் ஒன்று நடந்தது.லக்கி பேர்ட்(Lucky Bird) எனப்படும் பாடும் பறவை ஒன்றை கார்ட்டர் வளர்த்து வந்தார்.தான் எங்கு சென்றாலும் அதையும் உடன் எடுத்து செல்வது வழக்கம்.அப்படிதான் இன்றும் அவருடன் அந்த அறையில் இருந்தது.அப்போது எங்கிருந்தோ அங்கு வந்த ராஜ நாகம் ஒன்று அந்த பறவையை விழுங்கிவிட.,டூட் ஆவி தான் உள்ளே வரவேண்டாம் என இப்படி எச்சரிததாகவும்,அறையினுள்ளே நூற்றுக்கணக்கான ராஜ நாகங்கள் இருக்கலாம் என்றும் மறுநாள் தலைப்பு செய்தியாகவே பத்திரிக்கைகளில் வந்துவிட்டது.பயந்து போன வேலையாட்கள் பலர் வேலையை விட்டே நின்றுவிட்டனர்.இதனால் கார்ட்டர் புதிய ஆட்களை வரவழைத்து இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கவேண்டியதாகிற்று.

மறுநாள் மீண்டும் அந்த அறை சோதனையிடப்பட்டபோது மற்றொரு வாசல் தென்பட்டது..இன்னுமொரு அறை.இந்த அறையில் மன்னர் அடுத்த ஜென்மத்தில் அவர் வாழ்வதற்கு  தேவையான உடை,இசைகருவி,விளையாட்டு பொருட்கள்,ஆயுதங்கள் உட்பட பல பொருட்கள் இருந்தன.அனைத்திலும் டூட் பெயர் பொறிக்கபட்டிருந்தது (மறு ஜென்மத்தில் தன்னுடைய பெயரை அவர் மறந்துவிடுவாராம்,அதை ஞாபகபடுத்த தான் அனைத்திலும் பெயர் பொரிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.)இதிலும் மன்னரின் உடல் இல்லை.அந்த அறையை சலித்து எடுத்தனர்,

அப்போது சுவரின் ஒரு பகுதியில் எதோ பூசப்பட்டது போன்று இருப்பதை கார்ட்டர் கண்டுபிடித்தார்.அந்த இடத்தில் ஒவ்வொரு கல்லாக பெயர்த்து எடுத்தனர்.முதலில் தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டி பார்த்த கார்ட்டர்,பிறகு மெழுகுவர்த்தியுடன் தான் மட்டும் உள்ளே சென்றார்.சில நிமிடங்கள் நிசப்தம் மட்டுமே நிலவியது.பிறகு உள்ளிருந்து கார்ட்டர் கத்தும் ஓசை மட்டும் கேட்டது,பயத்தில் அல்ல,சந்தோஷத்தில்..இத்தனை ஆண்டுகள் எடுத்த முயற்சி வெற்றியடைந்ததின் வெளிப்பாடு.இது தான் அனைவரும் எதிர்பார்த்த மன்னர் அடக்கம் செய்ய பட்ட அறை.ஆனால் போன வேகத்தில் வெளியே வந்தார் கார்ட்டர்.

காரணம் எகிப்திய அரசாங்கத்தின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தான்.எந்த ஒரு மம்மியை கண்டுபிடித்தாலும் உடனே அரசிடம் தெரிவித்து,அனுமதி பெற்று அரசு அதிகாரிகளின் முன்னிலையில் தான் மம்மி இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்,அந்த அதிகாரிகள் போட்டோ எடுக்கும் முன் எதையும் தொடக்கூடாது.நவம்பர் 29ல் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் ஒவ்வொரு பொருளாக வெளியே எடுத்தனர்(மன்னர் அடக்கம் செய்யப்பட்ட அந்த அறையில் இருந்த பொருட்களை தவிர).ஒவ்வொரு பொருளின் எடை உயரம் போன்றவை கணக்கிடப்படும் பணி இரண்டு மாதங்களாக நடந்தது.

பிப்ரவரி17, 1923 ல் மக்கள் முன்னிலையில் டூட்டின் அடக்கம் செய்யப்பட்ட அறை திறக்க பட்டது.அந்த அறையின் நுழைவு வாயிலில் “எனது கல்லறையை மாசுபடுத்துபவர்கள்  நைல் நதி முதலை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக” என்று எழுதப்பட்டிருந்தது.இதையெல்லாம் கார்ட்டரும்,கார்நோவனும் சட்டை செய்யவில்லை,உள்ளே நுழைந்தனர்.அறையினுள்ளே 7 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட தங்க தகடால் மூடப்பட்ட மரபெட்டி ஒன்று இருந்தது.மேலும் அங்கு டூட் மன்னர் கருஞ்சிறுத்தையின் மேல் சவாரி செய்வதுபோல் சிலை உட்பட பல பொக்கிஷங்கள் இருந்ததன.
பிறகு அந்த மரப்பெட்டியின் மேல் பாகம் திறக்கப்பட்டது,திறந்தவுடன் உள்ளே மனித வடிவிலான கவசம் ஒன்று இருந்தது..அதை திறந்தால் அதே போல் இன்னொன்று என 3 கவசத்திற்கு பின்னால் மம்மியாக்க பட்ட 19 வயதில் இறந்த டூட் மன்னர் மீண்டும் இந்த உலகிற்கு  வெளிப்பட்டார்..

 இன்றைய டெக்னாலஜியையும் மிஞ்சும் மம்மியாக்கப்படும் மருத்துவ முறை, 10 வயதிலேயே அரியணை,தன் சகோதரியையே திருமணம் செய்த டூட் மன்னரின் திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை வரலாறு அடுத்த பதிவில் தொடரும்..

**எழுத்து: மணி மாணிக்கம்** 


Sunday, October 13, 2013

கல்லறைக்குள் உலகம்: THE MUMMY

வியக்கவைக்கும் அறிவியலும்,நம்பமுடியாத அமானுஷ்யங்களும் ஒன்றாக கலக்கும் எதுவுமே நமக்கு ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் கொடுப்பவையே. அது போன்ற ஒரு ஆச்சர்யம் தான் எகிப்தின் மம்மிகள்.ஒவ்வொரு கல்லறையின் பின்னாலும் எத்தனை எத்தனை வரலாறுகள், (கட்டு)கதைகள்,வினோதங்கள்3௦௦௦ ஆண்டுகள் ஆகியும் சிதையாமல் இருக்கும் உடல்,இன்னமும் மணம் மாறாமல் இருக்கும் வாசனை திரவியம் என பண்டைய எகிப்தியர்களின் அறிவியல் சார்ந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் நம் புருவத்தை சற்றே உயர்த்திவிடும்,’’மரணத்திற்கு பின் இன்னொரு வாழ்க்கை உண்டு'' என்பதில் எகிப்தியர்கள் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தனர்,இதன் வெளிப்பாடு தான் இந்த மம்மிகள்..மண்ணில் தோண்டி எடுத்த மம்மிகள் கூறும் வரலாற்றையும், பண்டைய எகிப்திய கலாச்சாரங்களையும் அறிந்து கொள்ள வாருங்கள், இந்த கல்லறை உலகிற்கு...!!

 பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் மம்மிகளை தேடி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தை குடைந்து கொண்டிருந்தனர்.அவர்களுள் முக்கியமானவர்கள் இங்கிலாந்தை சேர்ந்த டேவிஸ்(DAVIS) மற்றும் கார்ட்டர்(CARTER). 1902ம் ஆண்டு VALLEY OF KINGS பகுதியில் மம்மிக்களை தேடும் பணியை ஆரம்பித்த டேவிஸ், 1902 முதல் 1907 வரை அவர் கிட்டத்தட்ட முப்பது மம்மிக்களை கண்டுபிடித்தார்.ஆனால் அதில் இருந்த பொக்கிஷங்கள் அனைத்துமே கொள்ளையர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கொள்ளையடிக்கப்பட்டும், கல்லறைகள் சிதைக்கப்பட்டும் இருந்தது. 1907 ம் ஆண்டு டேவிஸ் தங்கத்தகடு ஒன்றை கண்டுபிடித்தார்.அதில் ‘’மன்னர் டுத்தாங்கமென்’’ (KING TUTANKHAMEN) என்று எழுதப்பட்டிருந்தது.இதனால் டுத்தாங்கமென் என்ற மன்னனின் கல்லறை இந்த பகுதியில்தான் இருக்கவேண்டும் என்றும்,அதில் இதுவரை கிடைத்திராத பொக்கிஷங்கள் இருக்கலாம் என்ற புதுத்தெம்புடன் மீண்டும் தோண்ட ஆரம்பித்தார்.. டுத்தாங்கமென் பெயர் பொறித்த துணிகள்,ஆபரணங்கள் என்று கிடைத்த வண்ணம் இருந்தன,ஆனால் கல்லறை தான் கிடைத்தபாடில்லை.மூன்று கால்பந்து மைதானம் அளவுள்ள நிலத்தை 25 அடி ஆழதிற்கு வேலையாட்களை விட்டு தொண்டசெய்தார் டேவிஸ்.இறுதியில் இங்கு ஒன்றுமே இல்லை என்று 1914 ம் ஆண்டு ஏமாற்றத்துடன் இங்லாந்திற்கே சென்றுவிட்டார்.


அடுத்து இங்கு வந்தவர்தான் கார்ட்டர்.இந்த இடத்தில நிச்சயம் எதோ ஒன்று இருக்கவேண்டும் என்று அவரது மனபட்சி சொல்லியது போல..1917 முதல் டேவிஸ் விட்டதை கார்ட்டர் தொடர்ந்தார்..கார்ட்டரின் இந்த தேடுதலுக்கு ஆகும் செலவு அனைத்தையும் அவரது நண்பர் கார்நோவன் ஏற்றார்.1918 ல் ஏமாற்றம்,1919 ஏமாற்றம்,1920 ஏமாற்றம்,1921 ஏமாற்றம்.இதுவரை ஒரு மண்ணும் கிடைக்காததால் நொந்து போன...மன்னிக்கவும்...’மண்ணைத்தவிர வேறேதும் கிடைக்காததால் நொந்து போன’ கார்நோவன் இதற்கு மேல் இந்த வெட்டி வேலைக்கு பணம் தரமுடியாது என்று இங்கிலாந்ததிலிருந்து தந்தி அனுப்பிவிட்டார்.ஆனால் கார்ட்டருக்கு ஏதோ ஒரு அசாத்திய நம்பிக்கை இருந்ததது.கார்நோவனை சந்தித்து இன்னும் ஒரு வருடம் மட்டும் உதவும் மாறும்,அப்படி இந்த வருடத்தில் எதுவும் கிடைக்கவில்லையென்றால் இதுவரை ஆன மொத்த செலவுக்கான பணத்தையும் எப்படியாவது திருப்பி தந்துவிடுவதாகவும் கூறிவிட்டு வந்தார் கார்ட்டர்.
''டுத்தாங்கமெனை தேடுகிறார்கள்''
இதனால் வேலையாட்களை மேலும் துரிதமாக தோண்டசெய்தார். நவம்பர் 4,1922...வேலையாட்களுக்கு தண்ணீர் கொடுக்க சென்ற ஒரு சிறுவன் பள்ளம் தோண்டும் பகுதிக்குள் இறங்கினான்.அப்போது கால் இடறி அவன் கீழே விழ,விழுந்த இடத்தில் ’டங்’ என்று நூதன ஒலி எழுந்தது.அவன் அந்த இடத்தை மெல்ல துடைத்து பார்த்தான்.எதோ அதில் எழுதிருந்தது..உடனே அந்த சிறுவன் ஓடி போய் வேலையாட்களிடம் கூற,அவர்கள் கார்ட்டரிடம் தெரிவித்தனர்.அவ்வளவுதான் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார் கார்ட்டர்.மெல்ல மெல்ல அந்த பகுதியை துடைத்தனர்.இறுதியில் ஒரு கதவு வெளிப்பட்டது,அதில் ‘’ டுத்தாங்கமென் ’’ என்று எழுதியிருந்தது.அந்த கதவில் துளையிட்டு திறந்தார் கார்ட்டர். திறந்தவுடன் ஒரு குகை ஆரம்பித்தது..சிறிது சிறிதாக,மிக கவனமாக குகையை குடைந்தனர், 22 நாட்களுக்கு பிறகு ,நவம்பர் 26 ல் மற்றுமோர் கதவு வெளிப்பட்டது. இரண்டுகதவுகளுக்கும் இடையேயான தூரம் 30m.இரண்டாவதுகதவிலும் ‘’ டுத்தாங்கமென் ’’ என்று எழுதியிருந்தது.கார்ட்டர் எதிர்பார்த்ததும், எதிர்பார்க்காததும் இந்த இரண்டாம் கதவின் பின்னால் இவர்களுக்காக காத்திருந்தன.

அச்சுறுத்திய டுத்தாங்கமென் ஆவி...உறைந்துபோன கார்ட்டர்...கிடைத்த 

பொக்கிஷம்...இவை பற்றி அடுத்த பதிவில் தொடரும்.

Source Books:Mummies and its Treasures,Mummies:the secret of Pharaohs,Tomb of King.  


**எழுத்து: மணி மாணிக்கம்**


Sunday, September 22, 2013

கி.பி ஒன்று முதல் இன்று வரை-Part III (The End)

ஐரோப்பா முழுவதும் சிறு சிறு கூட்டமாக பரவி வேரூன்றிய யூதர்கள் தங்களது அறிவாலும் முயற்சியாலும் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்தனர்.ஆனால் ஒன்றை அவர்கள் மறந்தே போய்விட்டார்கள்,அது தான் அவர்களது புராதன மொழியாகிய ஹீப்ரு.பல்வேறு நாடுகளில் குடியேறி,அங்கேயே பரம்பரை பரம்பரையாக  வாழ்ந்து வந்ததால் அந்தந்த வட்டார மொழியையே பேசி வந்தனர்.கிட்டத்தட்ட ஹீப்ரு அழிந்தேபோய்விட்டிருந்தது.ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்காசியாவில் பரவியிருந்த அனைத்து யூதர்களும் தொடர்பில் இருக்க ஒரு பொதுவான மொழி ஒன்று தேவை என்பதை கொஞ்சம் தாமதமாகவே உணர ஆரம்பித்தனர்.
புராணத்தில் இறந்தர்வர்கள் கூட மீண்டும் பிழைத்ததுண்டு,ஆனால் அழிந்து போன ஒரு மொழி மீண்டும் வழக்கத்திற்கு வந்ததாக எந்த ஒரு வரலாறும் இல்லை.இந்த சாதைனையை செய்து காட்டியவர்கள் யூதர்கள்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழக்கொடிந்த மொழியை மீண்டும் தோண்டிஎடுத்தனர்.பழங்கால புத்தகங்கள்,புராணங்களை கொண்டு மீண்டும் ஹீப்ருவுக்கு உயிரூட்டினர்.'கில்லி' படத்துல ஒரு வசனம் வரும்,விஜய் த்ரிஷாவிடம் சொல்வார், "என்ன பொறுத்த வரைக்கும் எறங்கிட்டா ஜெய்க்கணும்,ஜெய்ச்சே ஆகணும்".இது யூதர்களுக்கு மிக சரியாக பொருந்தும்.இது சாத்தியமா முடியுமா என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை,அது தான் அவர்களின் குணம்.மெல்ல மெல்ல உயிர் பெற்று,எழுத்து வடிவம் பெற்று உலாவ தொடங்கியது ஹீப்ரூ.இன்று இஸ்ரேலில் தேசிய மொழியே ஹீப்ரூ தான்.
ஹீப்ரூ அவர்களது (அறிவு)போராட்ட வேகத்தை அதிகரித்தது.அதன் விழைவு தான் நில வங்கி திட்டம்.

நில வங்கி :

முதன் முதலில் வங்கி முறையை உலகிற்கு அறிமுகபடுத்திய பெருமை இவர்களையே சாரும்.இஸ்ரேலை உருவாக்கவேண்டுமானால் அந்த நாட்டில் பெரும்பான்மையான யூதர்கள் வேண்டும்,ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்காசியாவில் பரவியுள்ள யூதர்கள் வர தயார் தான்,ஆனால் தங்க வீடும்,வீடுகட்ட நிலமும் வேண்டுமல்லவா,என்ன செய்யலாம் என மூளையை குடைந்தனர்.பெரும் பணக்கார யூதர்கள் இணைந்து இஸ்ரேலில் வங்கியை தொடங்கினர்,நிலத்தின் மேல் லோன் கொடுக்க ஆரம்பித்தார்கள்,கடன் வாங்கவா ஆளில்லை,ஏகப்பட்ட மக்கள் தங்கள் நிலத்தை வைத்து கடன் வாங்கினர்(அப்போது இஸ்ரேலில் 95% கிறிஸ்துவர்கள் மற்றும்  முஸ்லிம்களே இருந்தனர்).ஒன்றுக்கும் உதவாத பாலைவன நிலத்திற்கு ஏன் இவர்கள் இவ்வளவு கடன் குடுக்கிறார்கள் என்றெல்லாம் அவர்கள் சிந்திக்காதது சோகம் தான்.வட்டி கணக்கெல்லாம் அந்த பாமர மக்களுக்கு புரியவில்லை,கடனை திருப்பி செலுத்த முடியாமல் நிலத்தை இழந்தனர்,மேலும் வங்கி தனியாக சும்மா கிடந்த நிலத்தையெல்லாம் விலைக்கு வாங்கியது,கால் இஞ்ச் நிலம் கிடைத்தாலும் விடவில்லை.இதன் மூலம் கிடைத்த நிலத்தையெல்லாம் யூதர்களுக்கு மட்டுமே விற்றனர்,மீண்டும் தங்கள் தேசத்திற்கு குடிபெயர ஆரம்பித்தனர்,அவர்களின் ஆனந்த கண்ணீரில் பாலைவனமும் சற்று ஈரமாகித்தான் போனது .2000 வருட கனவல்லவா இது .யூதர்களின் திட்டம் இது தான் என்று நிலத்தை விற்ற மக்களுக்கு தெரியும்போது அனைத்தும் கையைவிட்டு போயிருந்தது.

இஸ்ரேல் உதயம் :

பல போராட்டங்களை கடந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஆதரவுடன் மே 14,1948 அன்று இஸ்ரேல் உருவானது.யூதமக்களின் அறிவாலும் தொடர் முயற்சியாலும் கிடைத்த சுதந்திரத்தை நன்றாக பயன்படுத்தி இன்று இஸ்ரேலை வல்லரசாக உருவாக்கியுள்ளனர்.ஒருவேளை இவர்கள் ஆயுதத்தை மட்டுமே நம்பி போராடிஇருந்தால் யூத இனம் என்றோ அழிந்திருக்கும்,அவர்கள் பயன்படுத்தியது கத்தியுடன் புத்தியையும்,பொறுமையையும்.

குறிப்பு : எந்த ஒரு மதத்தையும் குறைகூற வேண்டும் என்றோ ,ஒரு மதத்தை உயர்த்தி கூற வேண்டும் என்றோ  இந்த தொடரை நான் எழுதவில்லை.போராடி வென்ற ஒரு இனத்தின் உண்மை வரலாறே இது.ஆதலால் அதன் சம்பந்த பட்ட மொழி,நாடு,மதம் ஆகியவற்றை கூறுவது அவசியம் என்று கருதியே மதங்களின் பெயரை குறிப்பிடவேண்டியதாயிற்று.
இத்துடன் "கி.பி  ஒன்று முதல் இன்று வரை" முடிவடைகின்றது.இதை படித்த அனைவருக்கும் எனது நன்றிகள் .         

**எழுத்து: மணி மாணிக்கம் **
                                                               


Sunday, September 15, 2013

கி .பி: ஒன்று முதல் இன்று வரை- Part II

இயேசுவை சிலுவையில் அறைந்தாகிவிட்டது,இனி  நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று யூதர்களால்  நிம்மதி பெருமூச்சு விடமுடியவில்லை.இயேசுவின் மரணத்தினால் மக்களிடையே அனுதாப அலை பலமாக வீ சியது,தவிர  யூத ஆட்சியாளர்களிடம் இருந்த உட்கட்சி பூசல் காரணமாக  ஆட்சியின் மக்கள் மீது நம்பிக்கை இழந்தனர்.

பரவிய கிறிஸ்துவம்




கிறிஸ்துவம் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது,கிறிஸ்துவ பாதிரியார்கள் இந்த பொறுப்பை ஏற்றுகொண்டனர்.கண்ணில் பட்ட எவரிடமும் இயேசு,கிறிஸ்துவத்தின் பெருமையை சொல்லி தன பக்கம் கொண்டுவர முயன்றனர்.ஆனால் இதில் ஆபத்தும் இருந்தது,ஐரோப்பாவில் இரண்டு பாதிரியார்களை தீயிட்டு கொளுத்தினர் (சென்னையில் கிறிஸ்துவத்தை பரப்பவந்த தாமஸ் என்பவருக்கும் இதே முடிவு என்பது தான் சோகம்,அவரது நினைவாகவே St.Thomas Mount இன்று சென்னையில் உள்ளது).பல தடைகளை தாண்டி ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்காசியாவில் கிறிஸ்துவம் ஆழமாக வேருன்றியது.இதனிடையே யூதர்கள் தமது ஆட்சி,அதிகாரத்தை இழந்தனர்,அனைத்தும் கிறிஸ்துவர்கள் வசமாகிபோனது.

அடிமை அகதிகள்


100,150 ஆண்டுகளில் தன் சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல ஆனார்கள்,யூதர்களின் பாடசாலை,தேவாலயங்கள்,நூலகங்கள் இடிக்கப்பட்டன,இதை எந்த ஹீரோவும் அப்போது தட்டி கேட்கமுடியவில்லை,அப்படியே கேட்டாலும் அவனுக்கு பரிசு எமலோகம் தான்,மன்னிக்கவும் தேவலோகம் தான் .யூதர்களின் பலமே அவர்களது மனஉறுதியும் பொறுமையும் தான்,அடங்கி வாழ்ந்தார்களே தவிர முடங்கிவிடவில்லை.வீட்டிலேயே கல்வியை வளர்த்தனர்,தொழுதனர்.இதை கண்ட ஆட்சியாளர்களுக்கு பத்திகொண்டு எரிந்தது,இதனால் கிறிஸ்துவத்துக்கு மாற அனைவரையும் கட்டாய படுத்தினார்கள்,மாறாதவர்கள் நாட்டை விட்டுதுரத்தினர்.

சொத்து, வீடு என தன் உடைமைகளை விட்டு அகதிகளாக ஓடினார்கள் (பசியினாலே லட்சக்கணக்கானோர் இறந்ததாக மேற்கத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன)..வார்த்தைகளால் விவரிக்கமுடியாத சோகமிது.சென்ற இடத்திலும் இதே நிலை தான்,அங்கும் விரட்டினார்கள் மீண்டும் ஓட்டம்..ஒன்று கிறிஸ்துவனாக மாற வேண்டும் இல்லை ஓடவேண்டும்,இது தான் அப்போது யூதர்களின் நிலை.ஒன்றாக இருப்பது ஆபத்து என்று சிறு சிறு கூட்டமாக பிரிந்து ஐரோப்பா முழுவதும் பரவினார்கள் யூதர்கள்.சிறிய கூட்டம் தானே இவர்கள் என்ன செய்துவிடபொகிறார்கள் என நினைத்த அந்தந்த நாட்டு மக்களும் அரசும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.இதற்குள் கிட்டத்தட்ட 10நூற்றாண்டுகள் ஓடிவிட்டது.

காலங்கள் ஓடினாலும் யூதர்களின் மனது தன் சொந்த தேசமான ஜெருசலமை அடைவதிலேயே இருந்தது .பரம்பரை பரம்பரையாக வாரிசுகளுக்கு தன் இனத்தை பற்றியும் ஜெருசலத்தை பற்றியும் கதையாக சொல்லி விதைத்துவந்தனர்(இதன் அடிப்படையிலேயே ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்ததாக செல்வ ராகவனே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்).பல தேசங்களில் பிரிந்து வாழ்ந்தாலும்,பல நூறு  ஆண்டுகள்  தகவல் தொடர்பு ஏதும் இல்லை என்றாலும் ''நாம் யூதர்கள்,மீண்டும் நமக்கு ஜெருசலம்'' என்ற நோக்கத்தில் சிறிதும் மாறவில்லை என்பது மூக்கின்மேல் விரல் வைக்க வைக்கும் ஆச்சர்யம்தான்.                                 

விருட்சமாகிய விதை,ஒரு தேசத்தையே விலைக்கு வாங்கிய யூதர்கள்..அடுத்த பதிவில் பார்ப்போம் .நன்றி.
**எழுத்து: மணி மாணிக்கம்**                                          


Thursday, September 12, 2013

கி .பி: ஒன்று முதல் இன்று வரை

ஒரு இனம், தனக்காக ஒரு அரசு ,தனக்காக ஒரு மொழி ,ஒரு சுதந்திர நாடு இவற்றை அடைய கிட்டத்தட்ட 1900 ஆண்டுகள் போராடி வென்றுள்ளார்கள் என்றால் சற்று ஆச்சர்யமாகவே இருக்கும் ..அந்த அதிசய இனம் தான் யூதர்கள் (Hebrews ),அந்த சுதந்திர நாடுதான் இஸ்ரேல் .யூதர்கள் என்றாலே எதோ வெறுக்கக்கூடியவர்கள் என்பது போன்ற கசப்புணர்ச்சி இன்றும் பலர் மனதில் தோன்றுவதுண்டு .இதன் காரணத்தின் ஆணிவேரை அறிய வேண்டுமானால்  2013 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும் .

கி .பி ஒன்று:
அப்போது ஹெராத் என்ற யூத மன்னன் ஜெருசலத்தை ஆண்டுவந்தான்.அவன் பாட்டுக்கு ஜாலியாக ஆட்சி செய்து வந்தவனிடம் யூத குருமார்கள் சிலர் ஒரு அதிசய குழந்தையால் தங்கள் மணிமுடிக்கு ஆபத்து வரும் என்றும் ,அக்குழந்தை பின்னாளில் உலகை ஆளும் 'தலைவா' வாக மாறுவான் என்றும் பத்தவைத்தனர் .இதனால் பயந்த ஹெராத் மன்னன் ஒரு நல்ல நாளில் அந்த நகரில் இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் கொன்றான்.இங்கு தான் விதி விளையாடியது,அதாவது அந்த குறிப்பிட்ட குழந்தை மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டது.


அந்த குழந்தையின் பெயர் 'ஜோஷ்வா'..,'இயேசு' என்றால் சட்டென தெரியும்.அவனது பெற்றோர்கள் ஜோஸ்வாவை தூக்கிக்கொண்டு எகிப்துக்கு தப்பி சென்று விட்டனர்.பின் ஹெராத் இறந்த பின் தான் ஜெருசலத்திற்கு திரும்பினர்.அப்போது இயேசுவிற்கு வயது எட்டு.இயேசுவின் புதிய,மாறுபட்ட கருத்துக்கள்,அவரது சில மாய செயல்களால் அவரது புகழ் ஒரு புறம் பரவினாலும் மறு புறம் இவர் யூத மதத்தை அழிக்க வந்தவர் ,எதிரானவர் என்று யூதர்கள் மனதில் ஆழமாக பதிந்தது.இதனால் பல சூழ்ச்சிகள் செய்து பொய் குற்றம் சாட்டி அவருக்கு மரணதண்டனை அளித்தனர் யூத குருக்களும் பிலாத்து*  மன்னனும்.அப்பொழுது இயேசுவிற்கு வயது 33.

இந்த ஒரு மரணம் தான் மொத்த ஐரோப்பிய ,மத்திய கிழக்காசிய நாடுகளில் அடுத்த 1900 ஆண்டுகள் யூதர்கள் படப்போகும் துயரங்களுக்கான விதை.'இறைவனால் 
அருளப்பட்ட மதம்' என்ற பெயரிலிருந்து 'இயேசுவை கொன்ற மதம் ' என பெயர்பெற்ற யூதர்களின் நாடோடி வாழ்க்கை ,போராட்டம் ,இறுதியில் பெற்ற வெற்றி இவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.

* பிலாத்து கி .பி 26 முதல் கி .பி 36 வரை  ரோமின்(Rome) மன்னராக ஆட்சி செய்து வந்தவர்.இவரது பெயர் இன்றும் வரலாற்றில் நிற்க ஒரே காரணம் இயேசுவிற்கு மரணதண்டனை அளித்ததனாலேதான்.
உண்மையில் இவர் தன் மனதார இந்த தீர்ப்பை இயேசுவிற்கு வழங்கவில்லை,யூத குருமார்களின் டார்ச்சர் அப்படி.(அரசனாகவே இருந்தாலும் யூத குருக்களின் முன் கப்சிப் என்று தான் இருக்கவேண்டுமாம்!).           

 இப்பதிவை பற்றிய  உங்கள் கருத்துக்களை Comment செய்யவும்.நன்றி.

  *****எழுத்து: மணி மாணிக்கம்*****. 
                             


Tuesday, August 20, 2013

IT Friendss - Part 1

After sum years wen we r running for money & busy wit our jobs, cooking in kitchen for kids & packing up them to school.. Just imagin If one midnight, Suddenly ur awaking frm sleep and surrounded by ur frnds wishing u happy birthday.
Dats the magical moment wen tears come out of happiness. Friendship rocks…
Dedicated tis video to al idiots nd Just want to say-LOVE U FRIEND. be the same "Stay with me forever "





DARK - Multimedia Presentation




Future Technology - Multimedia Presentation